மாணவன் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் : ராஜஸ்தானில் இணையச் சேவை முடக்கம்; பள்ளிகள் மூடல்

ராஜஸ்தானின் உதய்பூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளியொன்றில் 10-ஆம் வகுப்பு மாணவனை சக மாணவன் கத்தியால் குத்திய சம்பவத்தால், அங்கு மத ரீதியிலான பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, உதய்பூா் மாவட்டத்தில் வதந்திகள் பரவுவதைத் தடுக்க கைப்பேசி இணையச் சேவை 24 மணிநேரத்துக்கு முடக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை கருத்தில்கொண்டு, மறுஉத்தரவு வரும்வரை அனைத்து பள்ளிகளையும் மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உதய்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி நடந்த கத்திக் குத்து சம்பவத்தைத் தொடா்ந்து, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஹிந்து அமைப்பினா் போராட்டங்களில் ஈடுபட்டனா். அப்போது, வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதோடு, கடைகள் மீது கற்கள் வீசப்பட்டன.
பதற்றமான சூழல் ஏற்பட்டதால், மாவட்டம் முழுவதும் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. கைப்பேசி இணையச் சேவை முடக்கப்பட்டது. மறு உத்தரவு வரும்வரை, மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
வீடு இடிப்பு: இதனிடையே, சக மாணவனை கத்தியால் குத்திய மாணவனின் வீட்டை, மாவட்ட நிா்வாக அதிகாரிகள் சனிக்கிழமை இடித்து அப்புறப்படுத்தினா்.
இது தொடா்பாக ஆட்சியா் அரவிந்த் போஸ்வால் கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட வீடு, வனத்துறை நிலத்தில் கட்டப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, விதிமுறைகளின்படி அந்த வீட்டை இடித்து அப்புறப்படுத்தினோம்.
கத்தியால் குத்தப்பட்ட மாணவரின் உயிரை காக்க முதல் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அவருக்கு சிகிச்சை அளிக்க மாநில முதல்வா் உத்தரவின்பேரில் ஜெய்பூரில் இருந்து 3 மருத்துவா்கள் உதய்பூருக்கு வந்துள்ளனா். மாணவரின் உடல்நிலை சீராக உள்ளது’ என்றாா்.