தனமல்வில பாதிக்கப்பட்ட சிறுமியை அநாகரீகமாக நடத்திய சட்ட வைத்திய அதிகாரி கைது செய்யப்பட்டு … 03 இலட்சம் பிணையில் விடுவிப்பு!
தனமல்வில பாதிக்கப்பட்ட சிறுமியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிலான முறைப்பாட்டின் பிரகாரம், பாரிய குற்றச் செயலுக்கு இலக்காகி ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிறுமியை சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய சட்ட வைத்திய அதிகாரி கொழும்பு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு,நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, சட்ட வைத்திய அதிகாரியை பிணையில் விடுவிக்குமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி ஓஷத மிகார மஹராச்சி நேற்று (17) மாலை உத்தரவிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய ரம்புக்கனை, சங்கமித்த மாவத்தை இல.12 இல் வசிக்கும் டி. சி. பிரியதர்ஷன பெரேரா என்ற 32 வயதுடைய நபரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 10ஆம் திகதி, தனமல்வில தேசிய பாடசாலை மாணவி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட தனமல்வில பொலிஸார், பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
சிறுமியை பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரி, சிறுமியை அச்சுறுத்தியதுடன் , சிறுமியின் தாயாருக்கும் அதிக அழுத்தம் கொடுத்து வைத்தியரின் விருப்பத்திற்கு ஏற்ப சிறுமியின் வாக்கு மூலத்தைக் கூட மாற்றியமையினால் சிறுமியின் தாயார் அழுத்தத்தை தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்றதாக கொழும்பு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கொழும்பு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள், குற்றம் சுமத்தப்பட்ட வைத்தியரை நேற்று (17) ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் வைத்து கைது செய்து வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
அங்கு முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த ஹம்பாந்தோட்டை நீதவான் சம்பந்தப்பட்ட வைத்திய அதிகாரியை மூன்று இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு மாஜிஸ்திரேட், விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வழக்கு மீண்டும் 23.10.2024 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.