உத்தரப்பிரதேச பேருந்து விபத்தில் 10 பேர் பலி, 37 பேர் காயம்
உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள சேலம்பூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிக்கப் வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், 27 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து புடான்-மீரட் மாநில நெடுஞ்சாலையில் நிகழ்ந்துள்ளது.
விபத்து குறித்து மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ஷ்லோக் குமார் கூறுகையில், “காசியாபாத்தில் உள்ள ஒரு ரொட்டி நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் திங்கள்கிழமை ரக்ஷா பந்தன் கொண்டாடுவதற்காக அலிகார் அருகே உள்ள தங்கள் சொந்த கிராமத்திற்கு பிக்கப் வேனில் சென்று கொண்டிருந்தனர். புலந்த்ஷாஹர் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, வேகமாக சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, பிக்கப் வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பிக்கப் வேன் முற்றிலும் நொறுங்கிய நிலையில், பேருந்தின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது.
இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், 27 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் புலந்த்ஷாஹர், மீரட் மற்றும் அலிகார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அங்கு ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது என்று தெரிவித்தார்.
விபத்து குறித்து அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், விபத்தில் பலியானவர்களிந் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்துள்ளதுடன் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக உயரிய சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
விபத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அலிகார் மற்றும் சம்பாலை சேர்ந்தவர்கள். இன்னும் ஒருவரது உடல் மட்டும் அடையாளம் காணப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.