மம்தா மீது நம்பிக்கையில்லை! – கொலை செய்யப்பட்ட மருத்துவரின் பெற்றோர்
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ மேற்படிப்பு பயிற்சி பெற்று வந்த 31 வயதான பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் பேரதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.
இந்த கொலை வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் கொல்கத்தா காவல்துறை மேற்கொண்ட விசாரணை திருப்திகரமாக இல்லை என்று தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர் உயிரிழந்த மருத்துவரின் பெற்றோர். ஞாயிற்றுக்கிழமை(ஆக. 18) செய்தியாளர்களுடன் பேசிய மருத்துவரின் பெற்றோர், தங்கள் மகளுக்கு நீதி கேட்டு நடைபெறும் போராட்டத்துக்கு முட்டுக்கட்டை போடும் நடவடிக்கைகளில் முதல்வர் மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருவதாகவும், இந்த வழக்கை அவசர கதியில் விரைந்து முடிக்க முற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
“முதல்வர் மீது அதிருப்தியில் உள்ளோம். மாநில அரசு வழங்கிய நிவாரணத் தொகையையும் நிராகரித்துவிட்டோம்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்று மம்தா பானர்ஜி உறுதியளித்தார், ஆனால் இதுவரை அப்படி ஏதும் நிகழவில்லை.
நீதி கிடைக்க வேண்டும் என்று முதல்வர் குறிப்பிடுகிறார், ஆனால், நீதி கோரி போராடும் சாமானிய மக்களை சிறையிலடைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
நீதி கோரி வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட மம்தா, இப்போது மக்களை போராட விடாமல் தடுக்கிறார். விசாரணையில் உண்மை வெளிப்படும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
தங்கள் மகள் பணிபுரிந்த ஆர்ஜி கர் மருத்துவமனையின் இதயப்பகுதி சிகிச்சைப்பிரிவில் பணியாற்றுவோர் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாக தாங்கள் உறுதியாக நம்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
“இந்த கொலை வழக்கில் இதுவரை ஒரேயொரு நபரை மட்டுமே கைது செய்துள்ளனர். ஆனால், இந்த கொலையில் பலருக்கு தொடர்பிருக்கிறது. மருத்துவமனையில் செயல்படும் மேற்கண்ட சிகிச்சைப்பிரிவு முழுமையாக இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக உறுதியாக நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, ஆர்ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வரின் அலைபேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ் ஆப் விவரங்களைச் சேகரித்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.