‘மொட்டு’ வேட்பாளர் நாமலுக்கு ஆதரவு திரட்டி 120 பிரதான கூட்டங்கள்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரதான 120 கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று இலங்கைக்கான ரஷ்யாவின் முன்னாள் தூதுவரும் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.
இதில் 40 கூட்டங்களில் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார் எனவும், முதலாவது பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதித் தேர்தல் களத்தில் தற்போதைய சூழ்நிலையில் சஜித் பிரேமதாஸவே முன்னிலையில் உள்ளார். நாமல் ராஜபக்ஷவுக்கு சஜித்துடன்தான் போட்டி உள்ளது. தேர்தல் பிரசாரம் ஆரம்பமான பின்னர் சஜித்தையும் அவர் முந்துவார்.
நாமல் ராஜபக்ச களமிறங்கியுள்ளதால் ரணில் விக்கிரமசிங்க அச்சத்தில் உள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர் பக்கம் சென்றிருந்தாலும், மக்கள் மொட்டுக் கட்சியுடன்தான் உள்ளனர்.” – என்றார்.