மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவரும் நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளராகவும் உள்ளவர் சிவராமன்.
இவர் பர்கூருக்கு அடுத்த கந்திகுப்பம் அருகே தனியார் பள்ளியில் மாணவர்களுக்குத் தனி வகுப்பு எடுப்பதற்காகவும் நாட்டு நலப்பணித் திட்டம் என்ற என்.எஸ்.எஸ். முகாம் குறித்த பயிற்சி அளிப்பதற்காகவும் பள்ளி முதல்வரைச் சந்தித்து அனுமதி கோரினார்.
பின்னர் பள்ளி நிர்வாகத்தின் ஒப்புதலுடன் மாணவர்களுக்கு வேண்டிய பயிற்சியை அவர் அளித்து வந்ததாகத் தெரிகிறது. இதில் சிவராமன் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் தரப்பில் குழந்தைகள் நலப் பாதுகாப்புத் துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து குழந்தைகள் பாதுகாப்புத் துறையினர் பள்ளியில் விசாரணை நடத்திய நிலையில், நடந்த சம்பவம் உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் பள்ளியில் விசாரணை நடத்தினர்.
மேலும், சிவராமனை விசாரிப்பதற்காக தேடியபோது அவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. மேலும், இந்தச் சம்பவத்தில் சிவராமனின் உறவினர்கள் 5 பேர் அவருக்கு உடந்தையாக இருப்பது தெரியவந்தது. உடனே காவல்துறையினர் அந்த 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சிவராமன்மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி பொறுப்பாளரின்மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் வெளியான சில மணி நேரத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சிவராமனை கட்சி பொறுப்பு, அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.