ஜனாதிபதி தேர்தலில் மக்கள் சஜித் பிறேமதாசவுக்கே வாக்களிக்க வேண்டும் : ரிஷாட் பதியுதின்
நேற்று (19/08) திங்கள், முசலி, கொண்டைச்சி கிராமத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடாத்திய கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதின் , ஜனாதிபதி தேர்தலில் மக்கள் சஜித் பிறேமதாசவுக்கே வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
“நடைபெற உள்ள தேர்தலில் நாங்கள் ஏமாந்து விடாது புத்தி சாதுரியமாக எமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.நாங்கள் மிக நிதானமாக சிந்திக்க வேண்டிய நேரம் இது. ஜனாதிபதி தேர்தலில் நான்கு வேட்பாளர்கள் மத்தியில் போட்டி நிலவுகிறது.”
“எமது கட்சி சஜித் பிரேமதாஸாவிற்கே ஆதரவு வழங்குகின்றது. காரணம் நமது நாட்டிலே எதிர்காலத்தில் இனவாதம் இருக்க கூடாது என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்.”
“எங்கள் ஜனாஸாக்களை எரிக்கின்ற போது கைகட்டி பார்த்துக் கொண்டு அமைச்சரவையில் இருந்தவர்கள்,அதற்கு பக்கபலமாக இருந்த 144 உறுப்பினர்களுடன் பாராளுமன்றத்தை வென்ற ஜனாதிபதி கோட்டபாயவிற்கு 20 ஆவது திருத்தச் சட்டத்தை வெல்லச் செய்வதற்காக எமது சமூகத்தை சேர்ந்த 6 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.”
“எமது சமூகத்தை அழிக்க கை உயர்த்திய அந்தக் கூட்டம் இன்று எங்கே இருக்கிறார்கள் என்று பாருங்கள்.”
“இந்த நாட்டிலே ஒரு காலத்தில் ஆயுதக் கலாச்சாரத்தை தூது விட்டவர்கள்,தற்போது ஜனநாயகத்தை பேசுகின்றவர்கள்,அவர்கள் இன்று எந்த மார்க்கத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் இல்லை.அவர்கள் நாஸ்திக கொள்கையைக் கொண்டவர்கள்.”
“இவ்வாறானவர்களுக்கு நாங்கள் இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பை கொடுக்க முடியுமா?,என்று சிந்திக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்”.
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் எமக்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை.அவரைப் பற்றிய நல்லெண்ணமே எங்களிடத்தில் இருக்கிறது.”
ஆனால் அவருடன் சேர்ந்து இருக்கிற கூட்டம் இந்த நாட்டிலே அநியாயத்தை செய்த ,கொடூரமாக செயற்பட்ட, ஜனாஸாக்களை எரிப்பதற்கு உத்தரவிட்ட அந்த முன்னாள் ஜனாதிபதியுடன் கை கோர்த்திருந்தவர்கள், இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துள்ளனர். இதன் காரணமாகவே நாங்கள் ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அபிவிருத்தி இடம்பெற்று வருகின்றது என்று ஏமாந்து விடாதீர்கள்.அரசாங்கம் என்பது மக்களின் பணம், அரசாங்கத்தில் யார் யார் எல்லாம் இருக்கின்றார்களோ அவர்களினாலேயே அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியும்.
எனவே இந்த நாட்டிலே மீண்டும் ஒரு முறை இனவாதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.நான் மட்டுமல்ல சிறுபான்மை தலைவர்களும் சஜித் பிரேமதாசவுடனேயே கைகோர்த்துள்ளனர்.
பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப கூடிய சட்ட வல்லுநர்கள் பலர் இருக்கின்றனர்.இனவாதத்திற்கு எதிரான சமூகப் பற்றுள்ளவர்கள் இருக்கிறார்கள்.கறைபடியாத உள்ளங்கள் உள்ள பலர் இருக்கின்ற அணியாகவே சஜித் பிரேமதாச அணி இருக்கின்றது.
அந்த அணியைப் பலப்படுத்துகின்ற கடமை தமிழர்களுக்கும்,முஸ்ஸீம்களுக்கும்,மலையகத் தமிழர்களுக்கும் இருக்கின்றது.இந்த மூன்று சமூகத்தினரின் வாக்குகளும் மிகவும் பெறுமதியான வாக்குகளாகவே இருக்கின்றது.
எனவே சஜித் பிரேமதாசவின் அமோக வெற்றிக்கு, சிறுபான்மை மக்களின் வாக்குகளும் வழிவகுக்கும்.
எதிர்வரும் 22 ஆம் திகதி தேர்தல் முடிவு வருகின்ற போது சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வருவார்.மன்னார் மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்போம்.எனவே அனைவரும் உங்கள் வாக்குகளை சீரழிக்காமல் சஜித் பிரேமதாசவிற்கு வழங்கி வெற்றி பெறச் செய்யுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்,ஜயதிலக, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதின், முன்னாள் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர்,முஜாகிர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டதோடு , பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
ரோகினி நிஷாந்தன்