புதிய அரசியல் கட்சிக்கான கலந்துரையாடல் ஆரம்பம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (20) கொழும்பில் நடைபெற்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நடைபெறும் எந்தவொரு தேர்தலுக்கும் இந்தப் புதிய அரசியல் கட்சியின் மூலம் வேட்பாளர்களை முன்வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
புதிய அரசியல் கட்சிக்குப் பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் கட்சிக்கான அரசமைப்பு ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டதால், அந்த அரசமைப்பின்படி செயற்படுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.