ரக்ஷாபந்தன்: அக்காவுக்கு சிறுநீரகத்தைப் பரிசளித்த தம்பி.

சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் ரக்ஷாபந்தன் பண்டிகை நாடு முழுவதும் ஆகஸ்ட் 19ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட்டது.
சகோதரனின் கையில் ‘ராக்கி’ கயிற்றைக் கட்டும் சகோதரிக்குப் பரிசாக பணம் அல்லது பொருள் வழங்கி தன் அன்பை சகோதரர்கள் வெளிப்படுத்துவர்.
ஆனால், கோவாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அவருடையத் தம்பி தனது சிறுநீரகத்தில் ஒன்றை தானமாக வழங்கி, தன் சகோதரியின் வாழ்க்கைக்குப் புதுப்பொலிவை அளித்துள்ளார்.
பாலிசிஸ்டிக் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, இறுதிக் கட்டத்தில் இருந்த 43 வயதான பெண்ணுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக தன் சிறுநீரகத்தில் ஒன்றை அவரது சகோதரர் தானம் செய்துள்ளார்.
இதுகுறித்து அப்பெண்ணின் கணவர் கூறுகையில், “சிறு வயதில் இருந்தே இருவரும் மிகுந்த சகோதர பாசத்துடன் வளர்ந்தனர். இந்த ஆண்டு புதிய வாழ்வைத் தனக்குப் பரிசாக அளித்த தன் சகோதரனுக்கு ராக்கி கட்டும்போது எனது மனைவி மிகவும் உணர்வுப் பூர்வமாக இருந்தார்,” எனக் கூறினார்.