கருத்துக்கணிப்பில் கமலா முன்னிலை; பணவீக்கம், பொருளியல் விவகாரங்களில் பின்னடைவு.
நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக டோனல்ட் டிரம்ப்பும் ஜனநாயகக் கட்சி சார்பாக கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், ஏபிசி நியூஸ், வாஷிங்டன் போஸ்ட் ஆகியவற்றின் ஆக அண்மைய தேர்தல் கருத்துக்கணிப்பில் கமலா முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவருக்கும் டிரம்ப்பிற்கும் இடையிலான இடைவெளி மிகவும் குறுகியது என்று தெரிவிக்கப்பட்டது.
அதிபர் போட்டியிலிருந்து அதிபர் ஜோ பைடன் விலகியதை வரவேற்று கமலாவுக்குப் பலர் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் இது கருத்துக்கணிப்பில் பிரதிபலிப்பதாகவும் கூறப்படுகிறது.
யாருக்கு வாக்களிப்பது என்று இதுவரை முடிவெடுக்காதவர்கள் கமலாவின் பக்கம் சாயக்கூடும் என்று பேசப்படுகிறது.
இருப்பினும், பொருளியல், பணவீக்கம், குடிநுழைவு ஆகிய மூன்று முக்கிய அம்சங்களில் முன்னாள் அதிபர் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்.
இந்த மூன்று அம்சங்களுக்குத் தொடர்ந்து பேரளவிலான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இவை வாக்காளர்களின் மனதை மாற்றக்கூடியவை என்று நம்பப்படுகிறது.
தேர்தலில் வெற்றி பெற வேண்டுமாயின் இந்த அம்சங்கள் தொடர்பாக ஆக்கபூர்வமான திட்டங்களை கமலா முன்வைக்க வேண்டும் என்று அரசியல் நிபணர்கள் கூறுகின்றனர்.
அண்மையில், நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
அதில் அவர் இலேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதையடுத்து, கருத்துக் கணிப்பில் அவர் ஆதிக்கம் செலுத்தி வலுவான முன்னிலையைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு நடக்கவில்லை.
அதற்கு மாறாக கமலா முன்னிலை வகிக்கிறார்.
இருப்பினும், தேர்தலில் தாம் வெற்றி பெறுவது உறுதி என்று டிரம்ப் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்.
ஜோ பைடனைவிட கமலாவை எளிதில் தோற்கடித்துவிடலாம் என்று அவர் அண்மையில் தெரிவித்தார்.
இதற்கிடையே, ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று சிகாகோவில் நடைபெறும் ஜனநாயக தேசிய மாநாட்டின்போது அதிபர் ஜோ பைடன் உரையாற்றுவார் என்றும் அவர் அதிபர் என்கிற முறையில் அனைவரிடமிருந்தும் விடைபெற்றுக்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபரான கமலாவை ஆதரித்து 81 வயது அதிபர் பைடன் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.