காஸாவிலிருந்து 6 பிணையாளிகளின் சடலங்கள் மீட்பு.
காஸாவின் தெற்கில் உள்ள ‘கான் யூனிஸ்’ பகுதியிலிருந்து ஆறு பிணையாளிகளின் சடலங்களை மீட்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
‘ஷின் பெட்’ எனும் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்புடன் நடத்திய கூட்டுச் சோதனையில் அந்தச் சடலங்கள் மீட்கப்பட்டதாக அது கூறியது.
திரு அலெக்ஸாண்டர் டான்சிக், திரு யோராம் மேட்ஸ்கர், திரு யாகெவ் புச்ஸ்டாப், திரு நாடவ் போப்பல்வேல், திரு அவ்ராஹாம் மண்டர், திரு சேய்ம் பேரி ஆகியோரே அந்தப் பிணையாளிகள்.
புலனாய்வு, தடயவியல் பகுப்பாய்வுகளைத் தொடர்ந்து, உயிரிழந்த பிணையாளிகளின் குடும்பங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக ராணுவம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
கான் யூனிஸ் நகரில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கை குறித்து அது எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
பேச்சுவார்த்தையின் மூலம் உடன்படிக்கை எட்டி, எஞ்சிய பிணையாளிகள் திரும்ப இஸ்ரேலுக்கு அனுப்பப்படுவதை உறுதிசெய்யுமாறு பிணையாளிகள் மற்றும் காணாமல்போன குடும்பங்களுக்கான ஓர் அமைப்பு இஸ்ரேலிய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், சண்டைநிறுத்த உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு எகிப்து, கத்தார், அமெரிக்கா ஆகிய நாடுகள், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் குழுவுக்கும் அழைப்பு விடுத்துவருகின்றன.
அதன் மூலம், இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீனக் கைதிகளும் ஹமாஸ் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியப் பிணையாளிகளும் விடுவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.