மின்தூக்கிக்குள் (லிப்ட்) ஒன்பது மணி நேரம் சிக்கித் தவித்த சிறுவர்கள்.

மலேசியாவில் காணாமல் போனதாகக் கருதப்பட்ட இரண்டு சிறுவர்கள் மின்தூக்கியில் மாட்டிக்கொண்டு பல மணிநேரம் தவித்தது பின்னர் தெரிய வந்தது.

அந்தச் சிறுவர்களில் ஒருவருக்கு 10 வயது, மற்றொருவருக்கு 11 வயது.

தலைநகர் கோலாலம்பூரின் தென்பகுதி நகரான தேசா பெட்டாலிங்கில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 19) அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

சம்பவம் குறித்து 10 வயதுச் சிறுவனின் சித்தி கூறுகையில், வீட்டில் இருந்து அருகில் புறப்பட்டு உள்ள பங்சாரியா அடுக்குமாடிக் குடியிருப்பில் நண்பனைப் பார்க்க சிறுவன் சென்றதாகவும் செல்லும் வழியில் ரொட்டி வாங்கப்போவதாக சொன்னதாகவும் தெரிவித்தார்.

பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட்ட சிறுவன் இரவு 10 மணி வரை வீடு திரும்பவில்லை என்பதைப் பின்னர் அறிந்ததமாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்.

சிறுவனின் கதி என்னவென்று அறியாமல் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் கவலையில் மூழ்கியதாகவும் அவர் ஊடகங்களிடம் கூறினார்.

இனா என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் தமது பெயராகக் குறிப்பிட்ட அந்தப் பெண். சிறுவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) அதிகாலையில் காணப்பட்டதாகச் சொன்னார்.

“மின்தூக்கிக்குள் சிறுவர்கள் இருவரும் மாட்டிக்கொண்டதாகக் கேள்விப்பட்டேன். இறுதியாக, அந்தச் சிறுவர்களே மின்தூக்கியின் கதவுகளைச் திறந்து வெளியே வந்ததாகவும் பசியுடனும் தாகத்துடனும் அவர்கள் இருந்ததாகவும் அறிந்ததேன்,” என்று இனா கூறினார்.

சிறுவர்கள் மின்தூக்கிக்குள் சிக்கிக்கொண்ட சம்பவத்தை கால்துறை துணை ஆணையர் ரவிந்தர் சர்பான் சிங் உறுதி செய்தார்.

கிட்டத்தட்ட ஒன்பது மணிநேரம் மின்தூக்கிக்குள் சிக்கி அவ்விருவரும் தவித்ததாக அவர் தெரிவித்தார்.

இருப்பினும், சிறுவர்கள் மின்தூக்கியில் எவ்வாறு சிக்கினார்கள் என்ற விவரத்தை ஊடகங்கள் தெரிவிக்கவில்லை.

Leave A Reply

Your email address will not be published.