1 கிலோ போதைப்பொருளுடன் STF இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் கைது.
விசேட அதிரடிப்படையின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் , 01 கிலோ 53 கிராம் போதைப்பொருளுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று (20) இரவு பிலியந்த மிரிஸ்வத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் தலைமையகம் , சம்பவம் தொடர்பாக தெரிவிக்கையில் ,
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் தலைமையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில் நேற்று (20) மாலை 7 மணியளவில் பிலியந்த மிரிஸ்வத்தையில் உள்ள சூப்பர் மார்க்கெட் வளாகத்தின் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்று சோதனையிடப்பட்டது.
வேனின் ஓட்டுநரும், முன் இடது இருக்கையில் இருந்த ஒருவரும் வாகனத்திற்குள் இருந்துள்ளனர். சோதனையிட்டபோது முன் இருக்கையில் அமர்ந்திருந்தவரின் பயணப் பையில் இருந்து ஒரு கிலோ 53 கிராம் ஹெராயின், ஒரு ஜோடி கைவிலங்கு, எலக்ட்ரானிக் ஸ்கேல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
மேலதிக விசாரணையில், வேனின் சாரதி மொரட்டுவை விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் 35 வயதுடைய பொலிஸ் பரிசோதகர் என்பதும், மொரட்டுவை விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் முன் இருக்கையில் இருந்து கைது செய்யப்பட்டமையும் தெரியவந்துள்ளது. ஒரு கிலோ போதைப்பொருள் அடங்கிய பையை குற்றப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்படி, ஹெரோயின் கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் பரிசோதகரும், போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் கடத்தல் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.