பத்லாபூர் பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – போராட்டக்காரர்கள் மீது தடியடி; இணைய சேவை முடக்கம்

பத்லாபூர் பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது.

மஹாராஷ்ட்ரா மாநிலம் தானே அடுத்த பத்லாபூரில் உள்ள தனியார் நர்சரி பள்ளியில் எல்கேஜி படித்து வந்த 4 வயது குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருவரும் பள்ளிக்குச் செல்ல பயந்த போது பெற்றோர் அவர்களிடம் விசாரித்தில், பள்ளியில் பணியாற்றும் ஹவுஸ் கீப்பிங் ஊழியர் ஒருவர் கழிப்பறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்த போது நடவடிக்கை எடுக்க கால தாமதம் ஆனதாக பெற்றோர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும் காவல் நிலையத்தில் புகார் அளித்த போதும் புகாரை ஏற்க காவல் நிலைய ஆய்வாளர் 12 மணி நேரம் காக்க வைத்தாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஆத்திரமடைந்த பெற்றோர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். அவர்களோடு ஆட்டோ ஓட்டுநர்கள், உள்ளூர் கடைக்காரர்கள் உள்ளிட்டோர் இணைந்து போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து, பள்ளி முன்பு திரண்டவர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி பள்ளியை சூறையாடினர்.

அதன் பின் அங்கிருந்து நடைபயணமாக பத்லாப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தனர். அங்கு ரயில் தண்டவாளத்தில் இறங்கிப் போராட ஆரம்பித்தவர்களோடு பொதுமக்களும் போராட்டத்தில் இணைந்தனர். இதனால் பல மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

போராட்டத்தை கைவிடுமாறும், தவறிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம் என போலீசார் உறுதியளித்தும் கலைந்து போக மறுத்த அவர்கள் கற்களை வீசி தாக்க தொடங்கினர். இதனால் அங்கிருந்த போலீஸ் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தை கலைத்தனர்.

தற்போது பாலியல் தொல்லை கொடுத்த தூய்மை பணியாளர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மாணவிகளின் வகுப்பு ஆசிரியர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வழக்கு பதிய தாமதம் செய்த காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமை காவலர் ஆகியோர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பத்லாபூர் சம்பவத்தை தீவிரமாக கவனித்து வருகிறோம். இந்த விவகாரத்தில் ஏற்கெனவே ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளியின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. விசாரணையை விரைவாக நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் யாரையும் விட்டுவைக்க மாட்டோம் என மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக 2 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மகாராஷ்டிரா மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குனருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தற்போது போராட்டம் பரவாமல் இருக்க பத்லாப்பூர் பகுதியில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.