மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பு.
கிருஷ்ணகிரியில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை தந்த வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம் பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளி நிர்வாகம், தேசிய சாரணர் படை (என்சிசி) திட்டத்திற்கு மாணவர்களை தயார்ப்படுத்துவற்கான முகாம் ஒன்றை அண்மையில் நடத்தியது.
அம்முகாமில் போலியான பயிற்றுநர்கள் கலந்துகொண்டு, பள்ளி மாணவிகள் 13 பேருக்குப் பாலியல் தொல்லை கொடுத்தனர்; எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அதன் தொடர்பில் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட என்சிசி பயிற்றுநர்கள் அறுவரில் ஐவரும், நடந்ததைக் காவல்துறைக்குத் தெரிவிக்காமல் மறைத்த பள்ளி நிர்வாகத்தினர் நால்வரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். வழக்கின் முக்கிய எதிரியாகக் கருதப்படும் சிவராமனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறி, மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதான போலி பயிற்றுநர்கள் மேலும் சில பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இத்தகைய பயிற்சி வகுப்புகளை நடத்தியது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அக்கல்வி நிலையங்களிலும் அவர்கள் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்தனரா என விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், இச்சம்பவங்களின் தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவர்மீதும் உரிய நடவடிக்கை எடுக்க ஏதுவாக, சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க முதல்வர் ஸ்டாலின் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கிருஷ்ணகிரி சம்பவம் தொடர்பில் 15 நாள்களுக்குள் விசாரணையை முடிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
விசாரணையை விரைந்து முடித்து 60 நாள்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, கிருஷ்ணகிரி பாலியல் வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள்மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறைத் தலைமை இயக்குநருக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அவ்விவகாரத்தில் காவல்துறையும் மாநில அரசும் எடுத்த நடவடிக்கைகள் குறித்து மூன்று நாள்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.