இயந்திரத்தில் சிக்கி, தலை துண்டாகி பால்பண்ணை ஊழியர் உயிரிழப்பு.
ஆவின் பால்பண்ணையில்பணியில் ஈடுபட்டிருந்தபோது இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி, பின்னர் தலை துண்டாகி பெண் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த அதிர்ச்சி சம்பவம், திருவள்ளூரை அடுத்துள்ள காக்களூர் ஆவின் பண்ணையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) இரவு நிகழ்ந்தது.
மாண்டவர் 30 வயதான உமாராணி என அடையாளம் காணப்பட்டது. அவருக்குக் கணவரும் இரு குழந்தைகளும் உள்ளனர்.
பால் பொட்டலங்களை இயந்திரத்தில் உமாராணி அடுக்கி வைத்துக்கொண்டிருந்தபோது முதலில் அவரது துப்பட்டா, அருகிலிருந்த கடத்துபட்டையில் (Conveyor belt) சிக்கியதாகக் கூறப்பட்டது. இதனால், அவரது தலை அவ்வியந்திரத்தில் சிக்கிக்கொண்டதில் தலை துண்டிக்கப்பட்டு அவ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று, உமாராணியின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் உமாராணியின் கணவர் கார்த்தி இருங்காட்டுக் கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருவதும் அவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இவ்விபத்து காக்களூர் பால்பண்ணை ஊழியர்கள் மற்றும் அப்பகுதிவாசிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாலையிலிருந்து பால் விநியோகமும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனிடையே, ஆவின் பால் பண்ணைகளில் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துவதை உறுதிசெய்ய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்தபோது இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த உமாராணி குடும்பத்துக்கு இபிஎஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த உமாராணி குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.