கோல்கத்தா மருத்துவமனையில் மத்திய பாதுகாப்புப் படை.
விமான நிலையங்கள், நாடாளுமன்றத்தை பாதுகாக்கும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) உயர் அதிகாரிகள் புதன்கிழமை (ஆகஸ்ட் 21) காலை கோல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையைச் சோதனையிட்டனர்.
நாட்டையே உலுக்கிய 31 வயது மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த அரசு மருத்துவமனையில் துணை ராணுவப் படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை நடத்தி வருகிறது. சம்பவம் நடந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் மீண்டும் பணியை தொடங்கும் வகையில், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
ஆகஸ்ட் 15 அதிகாலையில் ஒரு கும்பல் மருத்துவமனைக்குள் நுழைந்து இரு தளங்களில் இருந்த மருத்துவ உபகரணங்களையும் பொருள்களையும் சேதப்படுத்தியது குறித்து நகர காவல்துறையிடம் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.
உயிரிழந்த மருத்துவருக்கு நீதி கேட்டு கோல்கத்தாவிலும் பல நகரங்களிலும் நடந்த போராட்டத்தின்போது வன்முறைச் சம்பவம் நடந்துள்ளது.
“மருத்துவமனை வளாகத்தை சேதப்படுத்திய சம்பவத்தை சமாளிக்க அரசு எப்படி ஆயத்தமின்றி இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
ஆகஸ்ட் 15 கும்பல் வன்முறைக்குப் பிறகு மருத்துவமனையின் பெரும்பாலான மருத்துவர்கள் வளாகத்தை விட்டு வெளியேறினர். மருத்துவர்கள் திரும்பி வந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது அவசியம் என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம் மத்தியப் படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் என்று உறுதியளித்தது.
பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு நீதி கேட்டு மருத்துவமனை முன்பு மாபெரும் போராட்டம் தொடரும் வேளையில், ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் புதன்கிழமை சிபிஐ அலுவலகத்திற்கு ஆறாவது சுற்று விசாரணைக்கு வந்தார்.
ஆகஸ்ட் 9ஆம் தேதி கருத்தரங்கு மண்டபத்தில் மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட பிறகு சம்பவத்தைக் கையாண்ட திரு கோஷிடம் கடந்த ஐந்து நாட்களாக மொத்தம் 64 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தீப் கோஷ் அரசு நிறுவனத்தின் முதல்வராக இருந்தபோது நிதி முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை வங்காள அரசு அமைத்துள்ளது.
மருத்துவமனையில் இடம்பெற்ற வன்முறை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் கருத்துகளைத் தொடர்ந்து, வங்காள அரசாங்கம் நாசவேலை தொடர்பாக மூன்று அதிகாரிகளை இடைநீக்கம் செய்துள்ளது.