ஆசிரியையின் தாலி பறிப்பு : அடகு வைக்க போன போது கைது.
ஹட்டன் பிரதேசத்தில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவரின் திருடப்பட்ட தங்க நகை மற்றும் தாலியை அடகு வைத்த சந்தேகநபர்கள் இருவரை அட்டன் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
ஹட்டன் நகரில் ஆசிரியை தனது குழந்தையுடன் பயணித்துக் கொண்டிருந்த போது பின்னால் வந்த நபர் ஒருவர் ஹட்டன் புகையிரத நிலைய நுழைவுப் பாலத்திற்கு அருகில் அவரது சுமார் ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
ஆசிரியை ஹட்டன் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தனியார் அடகுக் கடை ஒன்றில் தங்க நகையை அடகு வைத்த சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்து , ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு இரண்டு நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்த போது களவாடிய நபர் தப்பிச் சென்றுள்ளமை தெரிய வந்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் இவ்வாறான பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.