எரிமலை வெடிப்பு – விமானச் சேவைகள் பாதிப்பு.
நியூசிலந்தில் White Island எரிமலை வெடித்து வானில் சாம்பல் பரவியதால் விமானச் சேவைகள் தடைபட்டன.
விமான நிலையங்களின் ஓடுபாதை தெளிவாக இல்லை என்பதால் 10 விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டதாக Air New Zealand விமான நிறுவனம் சொன்னது.
இதற்கு முன்னர் பிரபலச் சுற்றுலாத்தலமாக இருந்த அந்தத் தீவு நியூஸிலந்தின் வடக்கே உள்ள தீவிலிருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அது நியூஸிலந்தின் ஆகப் பெரிய நகரான ஆக்லண்டிலிருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
எரிமலை 2019இல் வெடித்தது; அதில் 22 பேர் பலியாயினர். அதன் பிறகு அந்தத் தீவில் சுற்றுலா நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.
எரிமலையில் இந்த மாதத் தொடக்கத்தில் வெடிப்பு ஏற்படக்கூடிய சிறிய அறிகுறிகள் தென்பட்டன. வழக்கமான குமுறல் என்று நம்பப்பட்டது.
எதிர்வரும் சில வாரங்கள் அல்லது மாதங்களுக்கு இந்த நிலை தொடரலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
எரிமலை வெடிப்பால் நியூஸிலந்தின் முக்கியத் தீவுகளில் வாழும் மக்கள் சாம்பல் வாடை, கண், தொண்டை எரிச்சல் ஆகியவற்றை எதிர்கொள்ளச் சாத்தியமிருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரித்தனர்.