சிங்கப்பூரில் மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
சிங்கப்பூரில் மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை 16.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் $385.6 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது.
இது இப்படியே தொடர்ந்தால், 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் மோசடிச் சம்பவங்கள் மூலம் ஏற்படும் இழப்பு $770 மில்லியனைத் தாண்டக்கூடும்.
காவல்துறை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) வெளியிட்ட மோசடி, இணையக்குற்றங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களின்படி, 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை மோசடிகள் மற்றும் இணையக் குற்றங்களின் எண்ணிக்கை 18 விழுக்காடு உயர்ந்து 28,751 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த எண்ணிக்கை, 2023ன் முதற்பாதியில் 24,367 ஆக இருந்தது.
இந்த அரையாண்டில் பதிவான இணையக் குற்றங்களில் இணைய மோசடிக் குற்றங்களின் பங்கு 92.5 விழுக்காடு.
கடந்த ஆண்டின் அரையாண்டு காலகட்டத்துடன் ஒப்புநோக்க, இந்த அரையாண்டில் மோசடிகளின் எண்ணிக்கை 16.3 விழுக்காடு உயர்ந்து 26,587ஆகப் பதிவாகியுள்ளது.
மோசடிகளால் ஏற்பட்ட மொத்த இழப்புத் தொகை இந்த அரையாண்டில் 24.6 விழுக்காடு உயர்ந்து 385.6 மில்லியன் வெள்ளிக்கு அதிகமாகப் பதிவாகியுள்ளது. 2023ஆம் ஆண்டில் இந்தக் காலகட்டத்திற்கான இழப்பு 309.4 மில்லியன் வெள்ளியாக இருந்தது.
2022ல் ஏற்பட்ட 660.7 மில்லியன் வெள்ளி தொகை இழப்பு, இதுவரை ஓர் ஆண்டில் ஆக அதிகமான தொகையிழப்பாக பதிவாகியுள்ளது.
2024ன் முதல் பாதியில் சம்பவ எண்ணிக்கை 16.3 விழுக்காடு அதிகரித்து 26,587 ஆகப் பதிவாகியுள்ளது. கடந்தாண்டின் அதே காலக்கட்டத்தில் இந்த எண்ணிக்கை 22,853 ஆக இருந்தது.
மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாண்டில் 385.6 மில்லியன் வெள்ளிக்கு மேல் இழந்தனர். இந்தத் தொகை 2023ன் முதல் பாதியில் இழக்கப்பட்ட 309.4 மில்லியன் வெள்ளியைக் காட்டிலும் 24.6 விழுக்காடு அதிகம்.
இதில் 86 விழுக்காட்டு சம்பவங்களில் மோசடிக்காரர்கள், பாதிக்கப்பட்டோரின் கணக்குகளை நேரடியாக கையாள்வதில்லை.
மாறாக, மோசடிக்காரர்கள் நயவஞ்சகமாக பாதிக்கப்பட்டோரையே தங்களது வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தை மாற்றி விடச் செய்துள்ளார்கள்.
புள்ளிவிவரங்கள் கவலை அளிப்பவை
இதன்தொடர்பில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங், இந்தப் புள்ளிவிவரங்கள் கவலை அளிப்பதாகக் கூறினார்.
“மோசடிச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களே சுயமாகப் பணத்தை மாற்றி விட்ட சம்பவங்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இது கவலைக்குரியது. பாதிக்கப்பட்டவர்கள் பலர் வஞ்சிக்கப்பட்டு தங்கள் சொந்தப் பணத்தை மாற்றுவதை இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன,” என்று அவர் கூறினார்.
குறிப்பாக, முதலீட்டு மோசடிகள், அரசாங்க அதிகாரிகளைப்போல ஆள்மாறாட்டம் செய்பவர்கள் புரியும் மோசடிகள் ஆகியவற்றை திருவாட்டி சுன் சுட்டினார்.
2024ன் முதல் பாதியில் முதலீட்டு மோசடிகள், மொத்த மோசடிகளில் 12.5 விழுக்காடாக (3,330) பதிவு செய்யப்பட்டிருந்தாலும் பாதிக்கப்பட்டோர் 133.4 மில்லியன் வெள்ளியை இழந்தனர். அதாவது, இந்த வகை மோசடியால் ஆக அதிக அளவில் பணம் இழக்கப்பட்டுள்ளது.
முதலீட்டு மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சராசரியாக கிட்டத்தட்ட 40,000 வெள்ளி தொகையை இழந்தனர்.
ஆயினும், அரசாங்க அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து வஞ்சிப்பவர்கள் புரியும் மோசடிகளால் சராசரியாக ஒருவர் 116,500 வெள்ளி தொகையை இழக்கிறார்.
இத்தகைய மோசடிகளின் எண்ணிக்கை 2024ன் முதல் பகுதியில் 580 ஆகப் பதிவானது. பாதிக்கப்பட்டோர் இழந்த மொத்த தொகை 67.5 மில்லியன் வெள்ளி.
நண்பர் ஆள்மாறாட்டம், நச்சுநிரல் மோசடிகள் குறைந்தன
நண்பர்களாக ஆள்மாறாட்டம் செய்து மேற்கொள்ளப்படும் மோசடிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
இத்தகைய மோசடிகளின் எண்ணிக்கை 2023ல் 3,832 ஆக இருந்தது. இவ்வாண்டின் முதற்பாதியில் அந்த எண்ணிக்கை 38.2 விழுக்காடு குறைந்து 2,368ஆகப் பதிவாகியுள்ளது.
2023ன் முதல் பாதியில் இத்தகைய மோசடிகளால் 12.9 மில்லியன் வெள்ளி இழப்பு பதிவானது. இந்த எண்ணிக்கை 2024ல் 8.1 மில்லியன் வெள்ளியாகக் குறைந்தது.
நச்சுநிரல் இயக்கும் மோசடிகளும் குறைந்துள்ளன. 2024ன் முதல் பகுதியில் இத்தகைய மோசடிகளின் எண்ணிக்கை 86.2 விழுக்காடு குறைந்து 95 சம்பவங்களாகப் பதிவானது. 2023ல் இதே காலகட்டத்தில் 687 சம்பவங்கள் பதிவாகின.