35 நாடுகளின் வருகையாளர்களுக்கு இலவச விசா திட்டத்தை அறிவித்த இலங்கை

இலங்கை அரசு 35 நாடுகளிலிருந்து வருவோர்க்கு 30 நாள்களுக்கான இலவச விசா வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தில் சீனா, இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளும் அடங்கும் என்று அந்நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22ஆம் தேதி) அன்று தெரிவித்தார்.

இலங்கை அரசின் இந்தத் திட்டம் பயணத்துறைக்கு உந்துதல் அளித்து நாட்டின் பொருளியலை மீட்டெடுக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

ஆறுமாத அறிமுகத் திட்டமாக அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து இத்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக போக்குவரத்து அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

“வேகமாக வளர்ந்துவரும் பயணத்துறையின் பலன்களைப் பெற சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம் போல இலங்கையை மாற்றுவதே நோக்கம்,” என்று குணவர்த்தன செய்தியாளர்களிடம் விளக்கினார்.

இந்தியா, சீனா, பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, டென்மார்க், போலந்து, கஸக்ஸ்தான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், நேப்பாளம், இந்தோனீசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகள் இத்திட்டத்தின்கீழ் வருகின்றன.

கிட்டத்தட்ட 22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கை, அழகிய கடற்கரைகள், பழமையான ஆலயங்கள், மணக்கும் தேநீர் போன்றவற்றுக்கு பிரபலமான நாடாகும். கொவிட் கொள்ளைநோய், கடுமையான நிதி நெருக்கடி ஆகியவற்றால் இலங்கை நாட்டின் பயணத்துறை பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது.

எனினும், 2023ஆம் ஆண்டு பயணத்துறை மேம்பட ஆரம்பித்ததைத் தொடர்ந்து இலங்கை அதன் பலன்களை அனுபவிக்கத் தொடங்கியது. அந்நாட்டின் பயணிகள் வருகை 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக 2 மில்லியன் வருகையாளர்களை ஆகஸ்ட் மாத நடுப்பகுதி வரை ஈர்த்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.