அல்-காய்தாவால் உந்தப்பட்டதாகக் கூறப்படும் பயங்கரவாத அமைப்பை டெல்லி காவல்துறையினர் தகர்த்துள்ளனர்
ஜார்க்கண்ட், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலக் காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையில் அக்ககுழுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவிற்குள் ‘கலிஃபாத்’ என்ற அடிப்படைவாத இஸ்லாமியப் பகுதியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உயர்மட்ட பயங்கரவாத நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு இந்தக் குழு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
“தற்போதைய செயல்பாடுகளின்படி, அக்குழுவிற்கு ராஞ்சியைச் (ஜார்கண்ட்) சேர்ந்த டாக்டர் இஷ்தியாக் தலைமை தாங்கியுள்ளார். கலிஃபாத்’ தை அறிவிக்கவும், நாட்டிற்குள் மோசமான பயங்கரவாத நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும் அக்குழு விரும்புகிறது,” என்று டெல்லி காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் பல்வேறு இடங்களில் ஆயுதங்களைக் கையாள்வது உள்ளிட்ட பயிற்சி பெற்றதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
முக்கிய உளவுத்துறைத் தகவல்களை அடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குழுவின் நோக்கங்கள், இருப்பிடங்களை அத்தகவல்கள் அளித்துள்ளன. டெல்லி காவல்துறைக்கும் மாநிலக் காவல்துறையினருக்கும் இடையிலான கூட்டு முயற்சி, அச்சுறுத்தலைக் கண்டறிந்து, தகர்ப்பதில் முக்கியமானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
அதிரடி நடவடிக்கையின்போது, ராஜஸ்தான் மாநிலம் பிவாடியில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர்கள் ஆறு பேர் பிடிபட்டனர். மேலும், கூடுதல் விசாரணைக்காக ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய இடங்களிலிருந்து எண்மர் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பல்வேறு ஆயுதங்கள், வெடிமருந்துகள், நூல்களைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
விசாரணை நடந்து வருவதாகவும் சோதனைகள் தொடர்வதால் மேலும் கைது நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் டெல்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கரவாதத் தாக்குதல்களுக்குத் திட்டமிட்ட 14 பேர் கைது