ஜனாதிபதி வேட்பாளரான Dr. இலியாஸ் மறைந்தார் : யார் இந்த இலியாஸ் ?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த Dr.மொஹமட் இலியாஸ் திடீர் மாரடைப்பால் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
புத்தளத்தைச் சேர்ந்த மருத்துவர் மொஹமட் இலியாஸ் இறந்த போது , அவருக்கு வயது 78.
ஒரு நாட்டு வைத்தியராக (பரிசாரி) அனைவராலும் மதிக்கப்பட்ட ,அவரது தந்தையாரது பின்னணியில் சமூக சேவையாளராக உருவானவர் Dr.மொஹமட் இலியாஸ் .
ஈரான் – ஈராக் போர் காலத்தில் , இலங்கையிலிருந்து பாகிஸ்தான் ஊடாக ஈரானுக்கு சென்ற மருத்துவர் இலியாஸ் , வைத்திய பணிகளை செய்து விட்டு நாடு திரும்பினார்.
1976இல் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்குள் புகுந்து ஏழு முஸ்லிம்களை சப்.இன்ஸ்பெக்டர் டிமெல் தலைமையிலான பொலிசார் சுட்டுக்கொன்ற சம்பவத்தின் போது , அதற்கு எதிராக தலைமை தாங்கி , போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் இளைஞராக முன்னணியில் செயல்பட்டார்.
Dr.மொஹமட் இல்யாஸ், 1977 ஆம் ஆண்டில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் (TULF) சார்பில் புத்தளம் தொகுதியில் போட்டியிட்டு,சுதந்திரத் தமிழீழக் கொள்கைக்கு மக்கள் ஆணை கோரி தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அந்த தேர்தலில், இலங்கை அரசியலில் TULF முக்கியமான கட்சியாக உருவெடுத்தது.
மொஹமட் இல்யாஸ் 1977 ஆம் ஆண்டு தேர்தலில் புத்தளம் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக போட்டியிட்டபோது, அவர் முக்கியமான வேட்பாளர் என்றாலும், வெற்றி பெற முடியவில்லை. அந்தத் தேர்தலில் அவர் 3,577 வாக்குகளை மட்டுமே பெற்றார். வடக்கு – கிழக்குக்கு வெளியே தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்ட ஒரே தொகுதி புத்தளமாகும். ஐக்கிய தேசியக் கட்சி (UNP) வேட்பாளர் பாரிஸ்டர் நைனா மரிக்கார் வெற்றி பெற்றார்.
1985க்கு பின் தமிழீழ போராளிகளுக்கு உதவியதாக கைதாகி , பூசா சிறையில் இருந்து விடுதலையானார்.
மொஹமட் இல்யாஸ், தனது சமூகத்தின் உரிமைகள், இனம் மற்றும் மதத்திற்கு நியாயமான பிரதிநிதித்துவத்தைப் பெற உழைத்தார்.
சமூக சேவை: தனது அரசியல் வாழ்க்கையின் மூலம், இலியாஸ் புத்தளம் பகுதியின் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றினார். அவர் உழைப்பின் மூலம், மத, இன மக்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்த உழைத்தார்.
அரசியல் நேர்மை: மொஹமட் இல்யாஸ் தனது அரசியல் பயணத்தில் நேர்மையான மற்றும் தன்னலமற்ற தலைவராக திகழ்ந்தார். அவர் தனது அரசியல் பொறுப்புகளை சீராக நிறைவேற்ற, மக்களின் நம்பிக்கையைப் பெற்றார்.
இல்யாஸ் தனது காலத்தில் ஒரு தலைவராக மட்டுமல்லாமல், சமூகத்தில் ஒரு மதிப்புமிக்க நபராகவும் நிலைத்தார். அவரது அரசியல் பயணம், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் முயற்சிகளால் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கத்தின் போது யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.