மன்னாரில்,கடந்த காலத்தை விட டெங்கு பரவல் அதிகரித்துள்ளது:அரச அதிபர் கனகேஸ்வரன்

மன்னார் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை மற்றும் மக்கள் வேறு இடங்களுக்குப் பயணம் சென்று வருவதால், கடந்த காலங்களை விட இம்முறை மன்னார் மாவட்டத்தில் டெங்கு பரவல் அதிகரித்துக் காணப்படுவதாகவும், மாவட்டத்தில் டெங்கு நுளம்பின் தாக்கத்தை கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகிற நிலையில் அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான அவசர கலந்துரையாடல் இன்று (23/08)காலை, 9 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதோடு ,மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் நகரம் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் டெங்கு நுளம்பின் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் வீடு வீடாகச் சென்று டெங்கு பரிசோதனைகளை முன்னெடுத்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது பாடசாலை விடுமுறை காலம் என்பதால் எதிர்வரும் வாரம் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு நுளம்பு சிரமதான பணிகளை முன்னெடுத்து, நீர் தேங்கி நிற்கின்ற  இடங்களைத்  தவிர்த்து மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி கல்வியைத் தொடர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலயக்கல்விப் பணிமனையூடாக உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கிராம மட்டத்தில் இருக்கும் சுகாதார மேம்பாட்டுக் குழு ஊடாக கிராமங்களில் டெங்கு நுளம்பின் பரவல் காணப்படும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு திணைக்களங்களிலும் டெங்கு தொடர்பில் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களூடாக அலுவலகங்களில் டெங்கு நுளம்பின் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரச அதிபர் கனகேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள் சுகாதார வைத்திய அதிகாரிகள்,வைத்தியர்கள் பொதுச் சுகாதார பரிசோதர்கள்,பொலிஸார்,
கடற்படை, மற்றும் அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.