பி.சி.ஆர். பரிசோதனைகளை உடனடியாக அதிகரியுங்கள்! :
பி.சி.ஆர். பரிசோதனைகளை
உடனடியாக அதிகரியுங்கள்!
– அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி செயலகத்தில் கொரோனாத் தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றுக் கலந்துரையாடினார்.
அரசால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை மக்கள் காலப்போக்கில் மறந்துள்ளனர் எனவும், கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு அதுவே காரணம் என்று மருத்துவர்கள் கருதுகின்றார்கள் என்று ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“சகல மாவட்டங்களிலும் சீரான பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் பரிசோதனைகளை நடத்த வேண்டும்.
பெரிய தொழிற்சாலைகள் இந்தப் பொறுப்பை புறக்கணித்துள்ளன என்று தெரிகின்றது.
தற்போதைய நிலைமை பற்றிய தெளிவான புரிதலுடன் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு உதவ பொது மக்களும் ஊடகங்களும் கடமைப்பட்டுள்ளன.
நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேறுவதைத் தடுக்க ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” – என்றார்.