தாய்லந்துக் காட்டில் விழுந்து நொறுங்கிய விமானம் – அதிலிருந்த 9 பேர் மாண்டனரா?
தாய்லந்தில் விமானம் ஒன்று சாச்சொங்சோ (Chachoengsao) பகுதியில் உள்ள காட்டில் விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்த 9 பேரும் மாண்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
“காணாமற்போனவர்களைத் தேடும் முயற்சியை மேற்கொள்கிறோம். ஆனால் அவர்கள் மாண்டிருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கிறோம்,” என்று சாச்சொங்சோவின் ஆளுநர் தெரிவித்தார்.
சம்பவம் நேற்று (22 ஆகஸ்ட்) சிங்கப்பூர் நேரப்படி மாலை சுமார் 4 மணியளவில் நடந்தது.
விமானத்தில் இரு விமானிகளும் 7 பயணிகளும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
நால்வர் தாய்லந்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஐவர் சீன நாட்டவர் என்றும் கூறப்பட்டது.
விமானம் பேங்காக் விமான நிலையத்திலிருந்து டிராட் (Trat) மாநிலத்துக்குச் சென்றுகொண்டிருந்தது.
300க்கும் அதிகமானோர் தேடல், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணத்தை ஆராய விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.