ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தப் போகும் அங்கஜன் இராமநாதனும், சாரதி துஷ்மந்த மித்ரபாலவும்!

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபால ஆகியோர் உறுதியளித்தனர்.

அவர்கள் நேற்று (23) காலை கொழும்பு மால் வீதியில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் ஜனாதிபதியை சந்தித்து இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

பின்னர் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர்கள், பொருளாதார நெருக்கடிக்கு நடைமுறை தீர்வுகளை வழங்கக்கூடிய தலைவர் நாட்டுக்கு தேவை என சுட்டிக்காட்டினர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு முற்றாக வாய்ப்பில்லை எனவும், நாட்டின் மற்றும் மக்களின் எதிர்காலத்திற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை இந்த ஜனாதிபதித் தேர்தலில் உறுதிப்படுத்த தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் சுத்தமான அரசியல் பயணத்தை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அங்கஜன் இராமநாதன் 2013ஆம் ஆண்டு வட மாகாண சபை உறுப்பினராகப் போட்டியிட்டு 2015ஆம் ஆண்டு தேசியப்பட்டியல் உறுப்பினராக முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.
2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு இரண்டாவது தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார். தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவராக கடமையாற்றி வருகின்றார். அங்கஜன் ராமனாதன் நாடாளுமன்றத்தின் பிரதிக் குழுத் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.

சாரதி துஷ்மந்த மித்ரபால 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் கேகாலை மாவட்டத்தில் இருந்து முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார். கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய அவர், தற்போது கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.