பணமோசடியில் ஈடுபட்டதாக மூவர் கைது.
சிங்கப்பூரில் பணமோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இம்மாதத் தொடக்கத்தில் அரசாங்க அதிகாரியைப் போல ஆள்மாறாட்டம் செய்த மோசடி பற்றிக் காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்டவரிடம் 38,000 வெள்ளியை வங்கிக் கணக்கிற்கு மாற்றிவிடும்படி மோசடிக்காரர் கேட்டிருந்தார்.
மோசடித் தடுப்புத் தளபத்திய அதிகாரிகள் விசாரணை நடத்தி
26 வயது மோசடிக்காரரை அடையாளங்கண்டனர்.
அவர் ஹவ்காங்கில் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்த 40க்கும் மேற்பட்ட கைத்தொலைபேசிகள், ரொக்கம் எண்ணும் இயந்திரம், 60 சிம் அட்டைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அதன் பிறகு ஊட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இரண்டு ஆடவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஒருவருக்கு 34 வயது, மற்றொருவருக்கு 36 வயது.
அவர்கள் சிங்கப்பூரைவிட்டுச் செல்ல முயற்சி செய்தனர்.
மோசடி நடவடிக்கைகளில் துணைபுரிய அவர்கள் கைத்தொலைபேசிகளையும் சிம் அட்டைகளையும் வழங்கியதாக நம்பப்படுகிறது.
5 கைத்தொலைபேசிகள், 4 சிம் அட்டைகள், 30,000 வெள்ளி ரொக்கம் ஆகியவை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
மூவர் மீதும் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மூவாண்டு வரை சிறை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.