பெண்களைக் காப்போம் – யார்? யாரிடம் இருந்து?

உலக அரங்கில் பரபரப்பான செய்திகளுக்குப் பஞ்சம் இல்லை. எரியும் பிரச்சனைகளான பலஸ்தீனம் மற்றும் உக்ரைன் போர்கள் ஒரு புறம், பங்களாதேஸ் ஆட்சி மாற்றம் மறு புறம் என செய்திகள் உலக ஊடகங்களை ஆக்கிரமித்து நிற்கின்றன.

இதற்கிடையில் கடந்த வாரத்தில் வெளிவந்த இரண்டு செய்திகள் பெரிதும் கவனத்தை ஈர்க்காமல், பத்தோடு பதினொன்றாக மறைந்து போயின. மனித நாகரிகத்துக்கு, மானுட நேயத்துக்கு சவால் விடும் வகையிலான அந்தச் செய்திகளைப் பற்றிப் பேசியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இந்தக் கட்டுரை.

முதலாவது செய்தி ஈராக் நாட்டில் பெண்களின் திருமண வயதை 18இல் இருந்து 9ஆகக் குறைக்கும் சட்டம் தொடர்பானது. அடுத்தது ஆபிரிக்கக் கண்டத்தில் சிறுமிகளின் மார்பக வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கில் சிறு வயதிலேயே மார்பின் மீது சூடு வைத்து நசுக்குவது தொடர்பானது.

இரண்டு செய்திகளிலும் உள்ள தொடர்பு அவை.

மத, பண்பாட்டுப் பாரம்பரியங்களைப் பேணுவது மற்றும் பெண்களைப் பாதுகாப்பது. பெண்களை யாரிடம் இருந்து பாதுகாப்பது? வேறு யாரிடம் இருந்து? யார் இந்தப் பாரம்பரியங்களை உருவாக்கினார்களோ? யார் இந்தச் சட்டங்களை இயற்றுகிறார்களோ? அதே ஆண்களிடம் இருந்துதான் இந்தப் பெண்களைக் காப்பாற்றத் துடிக்கிறார்கள்? அதுவே நோக்கமானால் காப்பாற்றப்பட வேண்டிய நிலையில் பெண்கள் இருக்கிறார்கள் என்றால், அங்கே பெண்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவர்கள், மோசமானவர்கள் ஆண்கள் என்றல்லவா ஆகின்றது?

மானுட வரலாற்றில் மனித சமூகம் பல படிகள் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அதனால்தான் நாம் இன்றைய சமூகத்தை நாகரிக சமூகம் என்கிறோம். ஆனால், மனித சமூகத்தில் ஆண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை பெண்கள் இன்னமும் அடைந்துவிடவில்லை என்பதே யதார்த்தம். ஆண்களை விடவும் பல படிகள் பின்தங்கிய நிலையிலேயே பெண்கள் இருக்கிறார்கள். இதற்கு சிறப்பு எடுத்துக்காட்டுகள் தேவையில்லை. அன்றாட வாழ்வை உன்னிப்பாகக் கவனித்தாலேயே புரிந்து விடும்.

மனித குலம் பல்வேறு துறைகளிலும் முன்னோக்கிய பாய்ச்சலிலே சென்று கொண்டிருந்தாலும் அதனைப் பின்னோக்கி இழுப்பதில் கவனம் செலுத்தவும் பலர் இருக்கின்றார்கள் என்பது இது போன்ற செய்திகளைப் பார்க்கும் போது தெரிகின்றது.

ஈராக் நாட்டிலே புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சட்டமூலத்துக்கு உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்துக்குப் பெண் உறுப்பினர்கள் தங்கள் பலத்த எதிர்ப்பை வெளியிட்டுள்ள போதிலும் ஆண் உறுப்பினர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை என அவர்கள் வேதனையோடு கூறுகிறார்கள். தமது மத நம்பிக்கை, பாரம்பரியம் என்பவற்றின் கண்கொண்டு பார்க்கும் ஆண்கள் அறிவியல் அடிப்படையில் அதனைப் பார்க்கத் தயாராக இல்லை என்பது பெண் உறுப்பினர்களின் குற்றச்சாட்டு.

ஈராக்கைப் பொறுத்தவரை தாம் யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களைப் பொறுத்தவரை முற்றாகவே மறுக்கப்பட்டு வருகின்றது என்கின்றன தரவுகள். தற்போது வரை பெண்களின் திருமண வயது 18 என சட்டத்தில் வரையறை செய்யப்பட்டு இருந்தாலும், ஒரு நீதிபதி நினைத்தால் 15 வயது சிறுமியை திருமணம் செய்ய அனுமதிக்கலாம். இது சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்க நினைப்பவர்களுக்கே பொருந்தும். சட்டத்தை மதிக்கத் தயாராக இல்லாதவர்கள் சிறுமியரைத் திருமணம் செய்து வைத்துவிட்டு சட்ட வரம்பு வயது வரும்வரை அதனை வெளியே தெரியாதவாறு மறைத்து வைக்கும் வழக்கம் பரவலாக உள்ளது. அது மாத்திரமன்றி, இனக்குழுப் பாரம்பரியம் கடைப்பிடிக்கப்படும் பிரதேசங்களில் இளம் வயதுத் திருமணங்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன.

யுனிசெப் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் படி ஈராக்கில் 18 வயதுக்குக் குறைவான 28 விழுக்காடு சிறுமியர் திருமணம் செய்துள்ளனர். அது மாத்திரமன்றி அந்த நாட்டில் நடைபெற்றுள்ள பதிவு செய்யப்படாத திருமணங்களில் 22 விழுக்காடு திருமணங்களில் 14 வயதுக்கும் குறைவான சிறுமியரே மணப் பெண்கள்.

மத நம்பிக்கை என்ற பெயரில் தற்போது அறிமுகம் செய்யப்படவுள்ள சட்டம் பலத்த எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் அதன் எதிர்காலம் என்னவாகலாம் என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டிய விடயம். அதேவேளை புதிய சட்டமூலம் தொடர்பில் எதிர்ப்பை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம் “சிறுமியர் பாடசாலைகளுக்கும் விளையாட்டு மைதானத்துக்குமே உரியவர்கள், மண மேடைக்கு அல்ல“ எனத் தெரிவித்துள்ள கருத்து இந்தச் சட்டத்தை அமுல்படுத்த நினைப்போரின் சிந்தனைக்கு உரியது. இதனைப் புரிந்து கொள்ள ஈராக் நாடாளுமன்றத்தில் உள்ள ஆண் உறுப்பினர்களால் முடியுமா என்பது சந்தேகமே.

இள வயதுப் பெண்களின் மார்பக வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கில் சூடு வைக்கும் வழக்கம் ஆபிரிக்காக் கண்டம் முழுவதிலும் உள்ளதாகத் தெரிகின்றது. கமருண் நாட்டில் 50 விழுக்காடு பெண்கள் இந்தக் கொடுமையை அனுபவித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஆபிரிக்கக் கண்டம் முழுவதிலும் உள்ள நாடுகளில் 3.8 மில்லியன் பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 58 விழுக்காடு சம்பவங்களில் இந்தக் கொடுமையைப் புரிபவர்கள் பிள்ளைகளைப் பெற்ற தாய்மாரே என்பது திடுக்கிடும் தகவல்.

மார்பக வளர்ச்சி ஆண்களைத் தூண்டுவதால் தங்கள் பிள்ளைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகலாம் என்பதே இது தொடர்பில் முன்வைக்கப்படும் வாதம். ஆனால் இந்தக் கொடுமைக்கு ஆளான பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் துயர் சொல்லி மாளாதது. தங்கள் பிள்ளைகளை ஆண்களிடம் இருந்து காக்க(?) நினைக்கும் தாய்மாரும் உறவினர்களும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் உண்மையான அக்கறை இன்றிச் செயற்படுவதை என்னவென்று புரிந்து கொள்வது.

பிஞ்சு வயதில் சூடான கல் அல்லது இரும்பு கொண்டு மார்பகங்களைச் சுட்டுப் பொசுக்குவது எத்தனை கொடுமையானது? இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தமது அன்றாட வாழ்வில் எனுபவிக்கும் துயரங்கள் சொல்லில் வடிக்க முடியாதவை. வாழ்நாள் முழுவதும் மார்பகங்களில் வலியை உணரும் அவர்கள், திருமண பந்தத்தில் இணைந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். குழந்தைகளைப் பெற்றுவிட்டால் கூட அவர்களுக்குப் பாலூட்ட முடியாமல் பல தாய்மார் தவிக்கின்றனர்.

பெண்களின் உரிமைகளை இஸ்லாமிய ஆண்கள் பெரிதும் கணக்கில் கொள்வதில்லை எனப் பொதுவாகக் கருதப்பட்டாலும், ஆபிரிக்காவில் நடக்கும் இந்தக் கொடுமையில் இஸ்லாமியர்கள் பங்கு மிகவும் குறைவு என்கின்றன புள்ளி விபரங்கள். சிறுமியரின் மார்பகங்களில் சூடு வைக்கும் இந்த வழக்கம் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் மத்தியிலும், இனக் குழுக்களின் மத்தியிலுமே அவதானிக்கப்படுகின்றது.

மனித குல வளர்ச்சிப் போக்கில் இதுபோன்ற செய்திகள் இன்னமும் கண்டு கொள்ளப்படாதவையாகவே உள்ளன என்பது வேதனையானது. சிறிய விடயங்களைக் கூட ஊதிப் பெரிதாக்கும் ஊடகங்கள் கூட இவற்றை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. உலகெங்கும் வாழும் மனச்சாட்சி உள்ள ஒவ்வொருவரும் ஓங்கிக் குரல் எழுப்பினால் அன்றி இதுபோன்ற கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவர முடியாது.

உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் தாம் விரும்பிய வாழ்க்கையை வாழும் சுதந்திரம் உடையவர்களே. அந்த வாழ்க்கையை மறுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. இல்லவே இல்லை.

Leave A Reply

Your email address will not be published.