13 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது – உத்தர பிரதேச அரசு

13 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசு துறைகள் அனைத்திலும் சுமார் 17,88,000 க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில், உ.பி அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 2023-2024 நிதியாண்டிற்கான அசையா மற்றும் அசையும் சொத்துகளின் அனைத்து விவரங்களையும் ஆகஸ்ட் 31ம் தேதிக்கு முன்பு துறைசார் மதிப்பீட்டு தளத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
யாரெல்லாம் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லையோ அவர்களின் அலுவலக வருகைப் பதிவு அப்சென்ட் எனக் கணக்கிடப்பட்டு ஆகஸ்ட் மாதம் ஊதியம் செலுத்தப்படாது. துறை ரீதியான வழிகாட்டுதல்களின் படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17.88 லட்சம் அரசு ஊழியர்களில் இதுவரை 26 சதவிகிதம் பேர்தான் தங்களது சொத்து விவரங்களை போர்ட்டலில் பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 13 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் தங்கள் சொத்து விவரங்களை இன்னும் வெளியிடவில்லை.
இதுகுறித்து உத்தரபிரதேச தலைமைச் செயலாளர் மனோஜ் குமார் சிங், “ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்கும் ஊழியர்கள் மட்டுமே ஆகஸ்ட் மாதத்திற்கான சம்பளத்தை பெற தகுதியுடையவர்கள். மற்ற அனைத்து ஊழியர்களின் சம்பளமும் நிறுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.