வாகனம் ஓட்டும்போது மாரடைப்பு : மூன்று வாகனங்களில் மோதி வேன் சாரதி மரணம்.
நேற்று முன்தினம் (22) கொட்டாவ, மத்தேகொட வீதியில் மாரடைப்பு காரணமாக பிராடோ ஜீப், வேன் மற்றும் லொறி ஒன்றுடன் மோதிய விபத்தில் படுகாயமடைந்த வேனின் சாரதி சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
பன்னிபிட்டிய, பிராக்மணகம, இலக்கம் 176/2 இல் வசிக்கும் டொன் லசந்த தர்ஷன ஜயமான்ன என்ற 66 வயதுடைய வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த வர்த்தகர் தனது அன்றாட வேலைகளை முடித்துக் கொண்டு கொட்டாவ – மத்தேகொட வீதி வழியாக மத்தேகொட நோக்கி சென்று கொண்டிருந்த போது பின்ஹேன சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அங்கு கொட்டாவை நோக்கி முகாமைத்துவப் பணிப்பாளர் ஓட்டிச் சென்ற பிராடோ ஜீப் மீதும், பின்னர் மத்தேகொடை நோக்கி பல்கலைக்கழக மாணவர் ஓட்டிச் சென்ற வேன் மீதும், கொட்டாவை நோக்கி வர்த்தகர் ஒருவர் செலுத்திச் சென்ற லொறி மீதும் இந்த வேன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் வேனின் சாரதி மாத்திரம் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், அம்புலன்ஸ் வாகனத்தில் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.
பிராடோ ஜீப், இரண்டு வேன்கள் மற்றும் லாரியும் சேதமடைந்தன.
விபத்தின் போது உயிரிழந்த வேனின் சாரதிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், நேற்று (23) சடலத்தின் பிரேதப் பரிசோதனை ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நடைபெறவிருந்தது.
இது சம்பந்தமாக. சடலத்தின் பிரேத பரிசோதனை ஹோமாகம மரண விசாரணை நீதிவான் சமாதான நீதவான் சிந்தக உதய குமாரவினால் நடத்தப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸ் போக்குவரத்து பிரிவு நிலைய பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பொத்தேஜோ தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.