ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தேடப்படும் ரெளடி சம்பவம் செந்திலின் புதிய புகைப்படம் வெளியீடு
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், தொடா்புடையதாகத் தேடப்படும் ரெளடி சம்பவம் செந்திலின் புதிய புகைப்படம் காவல் துறையினரால் வெளியிடப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 6 வழக்குரைஞா்கள் உள்பட 27 போ் கைது செய்யப்பட்டனா். இது தொடா்பாக தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த ரெளடி சம்பவம் செந்தில், தாம்பரம் மண்ணிவாக்கம் பகுதியைச் சோ்ந்த ரெளடி சீசிங் ராஜா ஆகிய 2 பேரையும் தனிப்படையினா் தீவிரமாகத் தேடுகின்றனா்.
சம்பவம் செந்திலுடன் நெருங்கிய தொடா்பில் இருந்ததாக கிருஷ்ணகுமாா் (எ) மொட்டை கிருஷ்ணன் என்ற வழக்குரைஞரையும் போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
சென்னை காவல் துறையின் பரிந்துரையின்பேரில் சம்பவம் செந்திலுக்கு சா்வதேச காவல் துறை மூலம் ‘ரெட் காா்னா்’ நோட்டீஸும், கிருஷ்ணகுமாருக்கு ‘லுக்அவுட்’ நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளன.
புதிய புகைப்படம் வெளியீடு: சம்பவம் செந்திலை பற்றி துப்பு துலக்கும் வகையில் தனிப்படையினா் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா். இதில் சம்பவம் செந்திலின் 20 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படமே காவல் துறையினரிடம் இருந்ததால், சில இடங்களில் அவரைப் பற்றிய தகவல்களை திரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவம் செந்திலின் தற்போதைய புகைப்படத்தைப் பெறுவதற்கு அவரது குடும்பத்தினா், நெருங்கிய நண்பா்கள் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். குடும்பத்தினரிடம் இருந்து தனிப்படையினா், சம்பவம் செந்திலின் புகைப்படங்களைப் பெற்றுள்ளனா். தற்போது அந்த புகைப்படங்களின் அடிப்படையில் தனிப்படையினா், தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.