ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு? தமிழரசுக் கட்சி முடிவெடுக்கும் வரை மக்கள் பொறுமை காக்க வேண்டும்! – சுமந்திரன் எம்.பி. கோரிக்கை.

“ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி இலங்கைத் தமிழரசுக் கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை. எனவே, தமிழரசுக் கட்சி முடிவெடுக்கும் வரை பொறுமை காக்க வேண்டும் என்று எமது மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

திருகோணமலையில் நேற்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனை வரவேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“பலர் என்னிடம் வினவும் ஒரு வினாவாக இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்கப் போகின்றீர்கள் என்று கேட்கின்றனர். நாங்கள் ரணில், சஜித், அநுர ஆகிய மூன்று பிரதான வேட்பாளர்களையும் சமதூரத்தில் வைத்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றோம். தீர்க்கமான முடிவின் பின் யாருக்கு ஆதரவளிப்போம் எனக் கூறுவோம். அதற்கான காரணங்களையும் முன்வைப்போம். அதன் பின் நீங்களும் பூரண ஆதரவை வழங்கலாம்.

எமது தீர்மானத்தை மக்கள் மத்தியில் தெளிவான காரணங்களுடன் அறிவிப்போம். எமது மக்களுடைய வாக்குகள் தேவை என்று.மூன்று பிரதான வேட்பாளர்களுக்கும் நன்கு தெரியும். இதனால் நாங்கள் பேரம் பேசும் சக்தியாக அழுத்தங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றோம் என்பதை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு அறிவித்துள்ளேன்.

எம்மைப் பற்றிய நிலவரங்களைச் சிங்கள மக்களுக்கு அவர்களாகவே புரியக்கூடிய வகையில் அறிவிக்கக் கூடிய நிலை இருக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றேன். எமது கட்சி முடிவெடுக்கும் வரை பொறுமை காக்க வேண்டும் என மக்களாகிய உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.