“மின்சார நெருக்கடிக்கு சிறிசேனாவும் – ரணிலும் பொறுப்பேற்க வேண்டும்” – நாமல் ராஜபக்ச!
2022ஆம் ஆண்டு ஏற்பட்ட மின்சார நெருக்கடிக்கு 2015ஆம் ஆண்டு பதவியேற்ற மைத்ரி – ரணில் அரசாங்கமே காரணம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு அரசாங்கம் உமாஓயா மற்றும் சாம்பூர் மின் திட்டங்கள் இரண்டையும் இடைநிறுத்தியதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு உமா ஓயா திட்டத்தையும் சாம்பூர் மின்சார திட்டத்தையும் அரசாங்கம் அமுல்படுத்தியிருந்தால் , 2022ஆம் ஆண்டு இலங்கையில் மின்சார நெருக்கடி ஏற்பட்டிருக்காது என தேர்தல் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் தெரிவித்தார்.
2022ல், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுக்கு மேலதிகமாக இலங்கை மின்வெட்டுகளை எதிர்கொண்டது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கீழ் இலங்கையின் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என நாமல் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய இலங்கையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுதிப்படுத்தும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.