டெஸ்ட் கிரிக்கெட்டில் , பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்த பங்ளாதேஷ்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி, சாதனை படைத்துள்ளது பங்ளாதேஷ் அணி.
அதிலும், பாகிஸ்தானில் வைத்தே அவ்வணியை வீழ்த்தியது பங்ளாதேஷ் அணிக்குப் பெருமகிழ்ச்சி அளித்துள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக நஜ்முல் ஹொசைன் ஷான்டோ தலைமையிலான பங்ளாதேஷ் அணி பாகிஸ்தான் சென்றுள்ளது.
அவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கியது.
முதலில் பந்தடித்த பாகிஸ்தான் அணி, ஆறு விக்கெட் இழப்பிற்கு 448 ஓட்டங்களை எடுத்த நிலையில் முதல் இன்னிங்சை முடித்துக்கொண்டது. அவ்வணியில் சௌத் ஷகீல் (141), முகம்மது ரிஸ்வான் (171) என இருவர் சதமடித்தனர்.
அடுத்து பந்தடித்த பங்ளாதேஷ் அணிக்குக் கைகொடுத்தார் மூத்த வீரர் முஷ்ஃபிகுர் ரஹீம். அவர் 191 ஓட்டங்களைக் குவிக்க, அவ்வணி முதல் இன்னிங்சில் 565 ஓட்டங்களைச் சேர்த்தது.
அதன்பின் இரண்டாம் இன்னிங்சைத் தொடங்கிய பாகிஸ்தான் 146 ஓட்டங்களுக்குச் சுருண்டது. பங்ளாதேஷ் தரப்பில் ஷாகிப் அல் ஹசம் மூன்று விக்கெட்டுகளையும் மெஹ்தி ஹசன் மிராஸ் நான்கு விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
பின்னர் 30 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டி, பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைச் சுவைத்தது பங்ளாதேஷ்.
இதற்குமுன் பாகிஸ்தானுடன் மோதிய 13 ஆட்டங்களில் பங்ளாதேஷ் 12ல் தோற்றிருந்தது; ஓர் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிந்தது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கவுள்ளது.