ரணிலை வெற்றி பெற வைத்து நன்றி கடனை செலுத்துங்கள் – ஜீவன் தொண்டமான்
2024 ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அமோக வெற்றி பெற்றுக் கொடுத்து , மலையக மக்கள் நன்றியுள்ள மக்கள் என காட்ட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பெருந்தோட்ட வாக்குகள் வழங்குவது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட தலைவர்களுக்கு அறிவிப்பதற்காக கொட்டகலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகத்தில் நேற்று (25) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உரையாற்றினார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாரிய நட்டத்தை சந்தித்துக் கொண்டிருந்த நீர் வழங்கல் சபையை இளம் அமைச்சரான எனக்கு தந்தார்.
நஷ்டத்தில் இயங்கும் நீர் வழங்கல் சபையை வருமானம் ஈட்டும் நிறுவனமாக மாற்றிய பின் , ஜனாதிபதி, தோட்ட மக்களின் சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பது உட்பட தோட்ட மக்களது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கோரிய அனைத்தையும் வழங்கியதுடன், தேவையான அனைத்தும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகின்றன.
பெருந்தோட்ட மக்களின் வீடுகளுக்கான உரிமைப் பத்திரம் வழங்குதல், காணி உரிமை வழங்கல், தோட்டப் பிள்ளைகளின் கல்வித் தரத்தை உயர்த்துதல், சுகாதார நிலையை மேம்படுத்துதல் போன்ற அடிப்படை விடயங்களில் தற்போது செயற்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தோட்ட மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நுவரெலியா பிரதேசத்தில் உள்ள தோட்டமொன்றுக்கு நான் சென்ற போது தோட்ட அரசியல்வாதிகள் சிலர் தம்மை விமர்சித்ததாகவும், தோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு அரசியல்வாதிகள் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி சேனலில் ஒருவரையொருவர் முத்தமிடுவதை தாம் விமர்சிக்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தீர்த்து, பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அவரை மீண்டும் நாட்டின் ஜனாதிபதியாக பதவியில் அமர்த்துவதற்கு தோட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொருளாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களும் கலந்துகொண்டார்.