யாழில் குடும்பப் பிரச்சினையால் மனைவியை அறைக்குள் வைத்துப் பூட்டி தீ வைத்த கணவன்.
குடும்பப் பிரச்சினையால் மனைவியை அறைக்குள் வைத்து பூட்டி கணவன் தீ மூட்டியதில் மனைவி தீக்காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அச்சுவேலி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், அந்தப் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் நிருத்திகா (வயது 28) எனும் குடும்பப் பெண்ணே படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கணவன் – மனைவிக்கிடையில் நீண்ட காலமாகப் பிரச்சினைகள் நிலவி வந்தன. நேற்றும் இருவருக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில், கணவன், மனைவியை வீட்டின் அறைக்குள் இழுத்துச் சென்று தாக்கிய பின்னர், மனைவிக்குத் தீ வைத்து விட்டு அறைக் கதவைப் பூட்டி விட்டு தப்பிச் சென்றிருந்தார்.
அயலவர்கள் அந்தப் பெண்ணைக் காப்பாற்றி அச்சுவேலி வைத்தியசாலையில் சேர்த்திருந்தார்கள். அந்தப் பெண் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.