பாடசாலையின் அதிபரை உடனடியாக இட மாற்ற கோரி பெற்றோர்,பழைய மாணவர்கள் இணைந்து போராட்டம்.

மன்னார் வங்காலை புனித ஆனாள் கல்லூரி தேசிய பாடசாலையின் அதிபரை உடனடியாக மாற்றக் கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை(26/8) காலை  பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து பாடசாலைக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

“பிள்ளைகளின் கல்வியை பாழாக்காதே”, “ஒழுக்கம் இல்லாத உன்னால் எப்படி ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்க முடியும்?”ஒரு குடும்பத்திற்காக ஊரை அழிப்பதா?என்பன போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் வங்காலை புனித ஆனாள்  கல்லூரி தேசிய பாடசாலை கடந்த பல வருடங்களாக கல்வியிலும்,விளையாட்டு நிகழ்வுகளிலும்,ஏனைய போட்டிகளிலும் சாதனை நிலை நாட்டி வந்த நிலையில் அண்மைக் காலமாக பாடசாலை சகல துறைகளிலும் கீழ் மட்டத்தை அடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில்,

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக குறித்த பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் நலிவடைந்து காணப்படுவதோடு,மாணவர்களின் கற்றல் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகளிலும் மந்த நிலையே காணப்படுகிறது.

தற்போதைய அதிபரின் நிர்வாகத் திறனின்மையே இவ்வாறான வீழ்ச்சிக்குக் காரணம் எனவே உடனடியாக அவரை மாற்றி புதிய அதிபரை நியமிக்கும்படி
நீண்ட காலமாக உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த போதும் இதுவரை குறித்த அதிபரை மாற்ற எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து குறித்த போராட்டத்தை முன் னெடுத்ததாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  தெரிவித்தனர்.

இந்த நிலையில் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த மன்னார் வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள் உடனடியாக குறித்த விடயம் தொடர்பாக துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்த நிலையில் போராட்டம் நிறைவிற்குக் கொண்டுவரப்பட்டது.

 

Leave A Reply

Your email address will not be published.