வெண்ணெய் பிரச்சனை : நியூஸிலந்துக்குச் சொந்தமா? இந்தியாவுக்குச் சொந்தமா?

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெண்ணெயைப் பயன்படுத்திவிட்டுத் தனது பொருள்கள் 100 விழுக்காடு நியூஸிலந்தில் தயாரிக்கப்பட்டவை என ஒரு நிறுவனம் பொய் சொன்னது நிரூபிக்கப்பட்டுள்ளது.
நியூஸிலந்தைச் சேர்ந்த Milkio Foods Limited நிறுவனத்திற்கு 261,452 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதன் நெய் சம்பந்தப்பட்ட பொருள்களில் “100 விழுக்காடு தூய்மையான நியூஸிலந்து” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் அந்த நெய்யைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக நியூஸிலந்து வர்த்தக ஆணையம் தெரிவித்தது.
பொதுவாக நியூஸிலந்தில் தயாரிக்கப்பட்ட பால், வெண்ணெய் வகைகளுக்கு வெளிநாட்டில் நற்பெயர் உண்டு.
Milkio நிறுவனம் அந்த நற்பெயரைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டதாக ஆணையம் சொன்னது.
Milkio 15 விதிமீறல்களை ஒப்புக்கொண்டது.