தேர்தலை புறக்கணி.. விநியோகிக்கப்படும் துண்டு பிரசுரங்கள்.. பின்னால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதைத் தடுக்கும் வகையில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்படுவதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக ஜனநாயக தேர்தல் மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட குழுவினரால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் இவ்வாறான துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது என்றார்.
இது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் இறைமையை மீறும் செயலாகும் எனவும், 1981ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் பிரகாரம் இதனை செய்யக்கூடாது எனவும் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வாக்களிக்க வேண்டாம் என ஒருவருக்கு அழுத்தம் கொடுப்பது பாரிய தவறு , இது குறித்து தேசிய தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
இதேவேளை, மட்டக்களப்பு பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் ஆதரவாளர்கள் குழுவொன்று மதவாதக் கருத்தை உருவாக்க முயற்சிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.