மம்தா பானர்ஜி பதவி விலகக்கோரி மேற்கு வங்கத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!
பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து கொந்தளிப்புடன் இருக்கிறது கொல்கத்தா. பெண் மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டு பச்சிம்பங்கா சத்ரா சமாஜ் எனப்படும் பதிவு செய்யப்படாத புதிய மாணவர் அமைப்பு நபன்னா அபிஜான் என்ற பெயரில் நேற்று மாபெரும் பேரணி நடத்தியது. மருத்துவரின் கொலைக்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலகக்கோரி மாணவர் அமைப்பினர் பேரணி நடத்தினர். பேரணியில் வன்முறை நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து 6,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தலைமைச் செயலகத்தைச் சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. ஹவுரா பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன மேலும் தலைமைச் செயலகத்துக்கு அருகே 20 நிலைகளில் போலீஸார் இரும்பு மற்றும் அலுமினியத் தடுப்புகளை வைத்திருந்தனர். போராட்டக்காரர்கள் அவற்றின் மீது ஏற முடியாத வகையில் எண்ணெய் தடவப்பட்டிருந்தது. ட்ரோன்கள் மூலம் போராட்டக்காரர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.
கலவரத்தடுப்பு வாகனமான வஜ்ராவும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
போராட்டத்தின்போது மாணவர்களை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். ஹவுரா பாலத்தில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். கலைந்து செல்ல மறுத்தவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர். காவல்துறையினர் அடக்குமுறைக்கு அஞ்சாத மாணவர்கள், சாலைமறியலில் ஈடுபட்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
காவல்துறை தாக்குதலுக்கு பதிலடியாக மாணவர்கள் சிலர் கல்வீச்சில் ஈடுபட்டதால் போராட்டக் களம், வன்முறைக் களமாக மாறியது. இதனிடையே மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரியும், மேற்கு வங்க பாஜக இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பாஜக கேட்டுக்கொண்டுள்ளது.