திருமணம் குறித்து மனம் திறந்த ராகுல் காந்தி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்துள்ள ராகுல் காந்தி கடந்த சில ஆண்டுகளாகவும் சரி, நடந்துமுடிந்த தேர்தல் பிரச்சாரத்தின் போதும் சரி அவர் எதிர்கொண்ட முக்கிய கேள்வி திருமணம் எப்போது என்பதே. இதே கேள்வியை சில தினங்கள் முன் காஷ்மீர் சென்றிருந்தபோதும் எதிர்கொண்டார்.
ராகுல் சில தினங்கள் முன் ஜம்மு – காஷ்மீரில் மாணவிகள் சிலருடன் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடல் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவில், மாணவிகளில் ஒருவர் ‘நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்’ என்று ராகுலிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “கடந்த 30 ஆண்டுகளாக இந்த கேள்வியை நான் எதிர்கொண்டுவருகிறேன். இதனால் நான் கடும் அழுத்தத்துக்கு உள்ளாகிறேன். எப்போது திருமணம் என்ற கேள்வியை இப்போது நான் கடந்துவிட்டேன். எனது திருமணம் தொடர்பாக எந்த திட்டமிடலையும் நான் செய்யவில்லை. அது நடந்தால் பார்க்கலாம்.” என்று தெரிவித்தார்.
உடனே மாணவிகள். “உங்கள் திருமணத்துக்கு எங்களையும் அழைக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுக்க, அதற்கு, “நிச்சயம் அழைப்பேன்” என்று சிரித்தவாறு பதில் கூறினார் ராகுல்.
முன்னதாக, ரேபரேலி தொகுதியில் எம்பியாக தேர்வு பெற்ற பிறகு நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்திலும் பிரியங்கா காந்தி, “எப்போது திருமணம் செய்ய போகிறாய் என்று பெண்கள் கேட்கிறார்கள். அதற்கு பதில் வேண்டும்” என்று ராகுலிடம் பொதுமேடையில் வைத்தே கேட்டார். அப்போது பதில் அளித்த ராகுல் காந்தி, ‘மிகவிரைவில் நடக்கும்’ எனக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.