கச்சித்தீவு கடலில் இந்திய படகு கவிழ்ந்தது : இருவரை காணவில்லை.. இருவர் இலங்கை கடற்படையினரால் மீட்பு.
யாழ்ப்பாணத்திற்கு வடக்கே கச்சத்தீவுக்கு 08 கடல் மைல் தொலைவில் இந்திய கடற்பரப்பில் விபத்திற்குள்ளான இந்திய மீன்பிடிக் படகில் இருந்த இரு மீனவர்களை பத்திரமாக (27) மீட்டதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். காணாமல் போயுள்ள இரு மீனவர்களை தேடி வருகின்றனர்.
கச்சத்தீவு இலங்கை கடற்படையினர் தீவின் கடற்கரையில் அவதானிப்பு நடை பயணம் மேற்கொண்டிருந்த போது, கடற்கரைக்கு நீந்தி வரும் ஒருவர் அவதானிக்கப்பட்டு மீட்க பட்டதோடு , குறித்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் இந்திய மீனவர் என்பது தெரியவந்ததாகவும், கடல் சீற்றம் காரணமாக 4 மீனவர்களுடன் பயணித்த அவர்களது படகு , கடலில் கவிழ்ந்து தான் கச்சத்தீவு நோக்கி நீந்திச் வந்ததாகவும் குறித்த மீனவர் கடற்படையினரிடம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக, கச்சத்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் நின்ற கடற்படையினரின் கப்பல்களை அனுப்பி, இந்திய மீன்பிடி படகில் இருந்து தத்தளித்த மேலும் ஒருவரை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட இரண்டு இந்திய மீனவர்களும் நலமுடன் இருப்பதாகவும், அவர்களை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், காணாமல் போன மேலும் இரு இந்திய மீனவர்களை . கச்சத்தீவு கடற்பரப்பில் தொடர்ந்து தேடும் நடவடிக்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிகப் பணிகளுக்காக கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், இந்தியாவின் சென்னை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்குத் தகவல் அளித்துள்ளது.