புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் உயிர்மாய்ப்பு.
புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் மெல்போர்னில் தீயிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
23 வயதான இவர் கடந்த 2013ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பெற்றோருடன் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
தற்காலிக விசாவில் சுமார் 11 வருடங்களாக அந்த நாட்டில் தங்கியிருந்த அவர், முன்னதாக புகலிடம் கோரி விண்ணப்பித்திருந்த போதிலும் அது நிராகரிக்கப்பட்டிருந்தது.
மனோ யோகலிங்கம் என்ற இளைஞன் விசா பிரச்சினை காரணமாக மிகவும் கவலையடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றுமுன்தினமிரவு (செவ்வாய்கிழமை) அவர் தனக்கு தானே தீவைத்து கொண்டதாகவும், பின்னர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் விக்டோரியா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி (28) உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலிய மத்திய அரசின் “அகதிகள் தொடர்பாக அறிமுகப்படுத்திய கொள்கைக்கு” எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.