பத்திரிகையாளர்கள் மீது அமைச்சர் சுரேஷ் கோபி பரபரப்பு புகார்

மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, பத்திரிகையாளர்களுக்கு எதிராக காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

கேரள திரைத்துறை மீதான பாலியல் புகார் புயலை கிளப்பி உள்ளது. இதுதொடர்பாக, நடிகரும் மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, ஆவேசமாக பதிலளித்த அவர், பத்திரிகையாளர்களை பிடித்து தள்ளிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சுரேஷ் கோபி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அனில் அக்கரே திருச்சூர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். புகார் குறித்து விசாரணை நடத்த உதவி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பத்திரிகையாளர்கள் தனக்கு தொந்தரவளித்ததாக கூறி சுரேஷ் கோபியும் திருச்சூர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.

இதற்கிடையே, பாலியல் புகாரில் சிக்கிய மலையாள இயக்குநர் ரஞ்சித் பாலகிருஷ்ணன் மீது முதல் முறையாக கோழிக்கோட்டைச் சேர்ந்த ஆண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

அம்மாநில ஐஜி-க்கு அனுப்பியுள்ள புகாரில், ரஞ்சித் பாலகிருஷ்ணன் 2012ல் பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் வைத்து பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக கூறியுள்ளார். திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என விருப்பத்தை சொன்னதும் தம்மை தவிர்த்ததாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது திருவனந்தபுரம் கன்டோன்மண்ட் காவல்நிலையத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் நடந்த படப்பிடிப்பின் போது, ஜெயசூர்யா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஒருவர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், பிணையில் விடுவிக்க முடியாத சட்டப்பிரிவில் நடிகர் ஜெயசூர்யா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.