டெலிகிராம் நிறுவனர் பிரான்சிலிருந்து வெளியேறத் தடை.

டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைவருமான பாவெல் துரோவ் மீது வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 28) பிரான்ஸ் பல குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

அந்தக் குற்றச்சாட்டுகள் டெலிகிராம் செயலியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் விதிமீறல்கள் தொடர்பிலானவை. பாவெல் துரோவ், பிரான்சிலிருந்து வெளியேறத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

டெலிகிராம் செயலியில் தீவிரவாத, சட்டவிரோதப் பதிவுகள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ள 39 வயது துரோவ் தவறியதாக அவர் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ர‌ஷ்யாவில் பிறந்த அவர், இம்மாதம் 24ஆம் தேதியன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு அருகே உள்ள லெபூர்கெ விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார். அதற்குப் பிறகு சில நாள்கள் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, துரேவுக்காக வாதிடும் பிரெஞ்சு வழக்கறிஞரான டேவிட்-ஒலிவியே கமின்ஸ்கி, சமூக ஊடகத்துக்குத் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் ஒருவர் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பார் என்று சொல்வது முட்டாள்தனமானது என்று சாடினார். டேவிட்-ஒலிவியே கமின்ஸ்கி அவ்வாறு கூறினார் என்று பல ஊடகங்கள் தெரிவித்தன.

“டெலிகிராம், ஐரோப்பாவில் நடப்பில் உள்ள மின்னிலக்கப் பதிவுகள் தொடர்பிலான விதிமுறைகள் அனைத்துக்கும் இணங்கச் செயல்படுகிறது. அது, மற்ற சமூக ஊடகத் தளங்கள் பின்பற்றும் விதிமுறைகளைப் போலவே தங்களுக்கானவையும் இருப்பதை உறுதிசெய்வதில் கவனம் செலுத்தி வருகிறது,” என்று டேவிட்-ஒலிவியே கமின்ஸ்கி பல செய்தியாளர்களிடம் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.