புதிதாக திறக்கப்படவுள்ள மதுபான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்.

மன்னார், தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டை பகுதியில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபான நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பிரதேச மக்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (30/08) 10 காலை 10.00 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மன்னார் நகர பகுதியில் ஏற்கனவே ஒரு மது விற்பனை நிலையம் இயங்கி வரும் நிலையில் மன்னார்,தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டை பகுதியில் புதிய மது விற்பனை நிலையம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில்,மன்னார் பிரதேச செயலகம் எவ்வித அனுமதியும் வழங்காத நிலையில் தற்போது கொழும்பில் அனுமதி பெற்று இன்னும் சில தினங்களில் குறித்த மதுபான நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக தாங்கள்,அண்மையில் மன்னார் மது வரித் திணைக்களத்திற்குச் சென்று கேட்ட போது அவர்கள் புதிதாகத் திறக்கப்படவுள்ள மதுபான நிலையத்திற்கு ஆதரவாகத் தம்மோடு கடும் தொனியில் பேசியதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார், தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டை பகுதியில் புதிய மதுபான நிலையம் திறக்கப்பட வுள்ள நிலையில் அதனைச் சுற்றி மக்களின் குடியிருப்புகள் அமைந்துள்ளது.

குறித்த மது விற்பனை நிலையம் திறக்கப்பட்டால் அப்பகுதியில் பல்வேறு கலாச்சார சீர் கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் உடனடியாக குறித்த மதுபான நிலையத்தை  அங்கிருந்து அகற்றுமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், குறித்த பகுதியில் இருந்து மதுபான நிலையம் அகற்றப்படா விட்டால் மீண்டும் ஒரு சில தினங்களில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை அரசாங்க அதிபருக்கு கையளிக்கும் வகையில் மாவட்டச் செயலக அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.