மன்னார்  மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராகக் கொழும்பில் சுவரொட்டி,சட்டத்தரணிகள் 2வது நாளாகவும் பணிப்புறக்கணிப்பு.

மன்னார்  மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில் கொழும்பில் ஒட்டப்பட்ட அனாமதேய சுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யக் கோரியும்  2 ஆவது நாளாக  இன்றைய தினமும் வெள்ளிக்கிழமை (30/08)மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மன்னார் மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக ஒன்று கூடிய சட்டத்தரணிகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன் போது  மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி இ.கயஸ்பெல்டானோ  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“கடந்த 12 வருடங்களுக்கு முன்னர் மன்னார் மேல் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக சுமார் 52 பேர் வரை கைது செய்யப்பட்டு கடந்த 12 வருடங்களாக வழக்கு விசாரணை இடம்பெற்று நேற்றைய தினம் வியாழக்கிழமை(29/08) குறித்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.”

“இந்த நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை(28/08)குறித்த வழக்கு விசாரணை தொடர்பாக கொழும்பில் மன்னார் மேல் நீதிமன்ற நீதவானின் புகைப்படம் அச்சிடப்பட்டு,சிங்கள மொழியில் அவருக்கு எதிராக வசனங்கள் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.”

“குறித்த வழக்கு விசாரணைகள் உரிய முறையில் இடம் பெற்று வந்துள்ள போதும் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட குறித்த நடவடிக்கைக்கு எதிராகவே நேற்றும்,இன்றும் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளோம்.”

“எனவே உரிய அதிகாரிகள் மன்னார் மேல் நீதிமன்ற நீதவானுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டவர்களைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும்
இந்தப் பணிப்பகிஷ்கரிப்பினால் இன்றைய தினம் நடைபெறவிருந்த அனைத்து வழக்கு விசாரணைகளும் தவணையிடப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.