பெரிய ஆழ்கடல் துறைமுகத்துக்கு அடிக்கல் நாட்டிய மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிர மாநிலத்தின் பல்கார் பகுதியில் வத்வான் துறைமுகத் திட்டத்திற்கு ஆகஸ்ட் 30ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.
அது இந்தியாவின் ஆகப் பெரிய ஆழ்கடல் துறைமுகங்களில் ஒன்றாக அமையும்.
அந்தத் துறைமுகம் ரூ.76,000 கோடி செலவில் கட்டப்படுவதாகப் பிரதமர் மோடியின் அலுவலகம் தெரிவித்தது.
கட்டி முடிக்கப்பட்ட பிறகு அது அனைத்துலகக் கப்பல் பாதைகளுக்கு நேரடித் தொடர்பு வழங்கும் என்றும் பயண நேரத்தையும் செலவையும் குறைக்கவும் அந்தத் துறைமுகம் உதவுமெனக் கூறப்பட்டது.
அதிநவீனத் துறைமுகத் தொழில்நுட்ப வசதிகளும் 1,000 மீட்டர் நீளமுள்ள ஒன்பது கொள்கலன் முனையங்களும் அதில் இருக்கும்.
அந்தத் துறைமுகம் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்றும் உள்ளூர் வர்த்தக வளர்ச்சிக்கு உந்துதலாக விளங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வட்டாரத்தின் ஒட்டுமொத்தப் பொருளியல் வளர்ச்சிக்கும் அது கைகொடுக்கும் என்று கருதப்படுகிறது.
வத்வான் துறைமுகம் செயல்படத் தொடங்கியபின் இந்தியாவின் கடல்துறைத் தொடர்பை மேம்படுத்துவதுடன் உலகளாவிய வர்த்தக நடுவமாக இந்தியாவின் நிலையை அது வலுப்படுத்தும் என்று பிரதமர் அலுவலக அறிக்கை குறிப்பிட்டது.
உலக அளவில் முன்னிலை வகிக்கும் பத்துத் துறைமுகங்களின் பட்டியலிலும் அது இடம்பிடிக்கும் என்று கருதப்படுகிறது.
அரபிக் கடலில் அமைக்கப்படும் அந்தத் துறைமுகம் தூரக் கிழக்கு, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, அமெரிக்கா ஆகியவற்றுடன் வர்த்தக இணைப்புகளை ஏற்படுத்த உதவும்.
வத்வான் துறைமுகக் கட்டுமானத்திற்காக கடலிலிருந்து நிலமீட்புத் திட்டத்தின் மூலம் 1,448 ஹெக்டர் பரப்பளவிலான நிலப்பகுதி மீட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2030ஆம் ஆண்டு அது கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வத்வான் துறைமுகத் திட்டம் 120,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எனக் கூறப்பட்டது.