தன்னைக் கடத்தியவரைப் பிரிய மறுத்துக் கதறி அழுத குழந்தை
உத்தரப் பிரதேச மாநிலத்தின் யமுனை நதிக்கரையில் நடந்த ஒரு சம்பவத்தின் காணொளி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தன்னைக் கடத்தியவரைப் பிரிய மனமின்றிக் குழந்தை ஒன்று கதறி அழுவதைக் காட்டும் காணொளி அது.
ஆக்ரா நகரைச் சேர்ந்தவர் தனுஜ் சாஹர். தலைமைக் காவலராகப் பணியாற்றிய அவர் காவல்துறையிலிருந்து தற்காலிகப் பதவிநீக்கம் செய்யப்பட்டார். தனுஜ் சாஹர், உத்தரப் பிரதேச மாநிலக் காவல்துறையின் சிறப்புப் பிரிவு, கண்காணிப்புப் பிரிவு ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
இவர் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வசிக்கும் தனது உறவினரின் 11 மாத ஆண் குழந்தையைக் கடத்தினார். பின்னர் தலைமறைவான தனுஜ் சாஹரைக் காவல்துறையினர் வலைவீசித் தேடினர்.
தனது தோற்றத்தை மாற்றி நீளமான தாடி, தலைமுடியை வளர்த்துக் கொண்ட இவர், உத்தரப் பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் யமுனை நதிக்கரையில் குடிசை அமைத்து, துறவிபோல் வேடமிட்டு வாழ்ந்து வந்துள்ளார். கடத்திச் சென்ற குழந்தையைத் தனது மகன் என்று கூறி அவர் வளர்த்ததாகக் கூறப்பட்டது.
தனுஜ் சாஹரின் இருப்பிடம் குறித்துத் தகவல் கிடைக்கவே காவல்துறையின் சிறப்புப் படையினர் அவரை மடக்கிப் பிடித்து, குழந்தையை மீட்டனர்.
பின்னர் குழந்தையின் பெற்றோர் ஜெய்ப்பூர் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அப்போது அந்தக் குழந்தை, தன்னை கடத்திச் சென்ற தனுஜ் சாஹரை விட்டுப் பிரிய மனமில்லாமல் கதறி அழுதது. தனுஜ் சாஹரும் குழந்தையைக் கட்டிப்பிடித்து அழத் தொடங்கினார்.
அவரிடம் இருந்து குழந்தையை வலுக்கட்டாயமாகப் பிரித்து அதன் பெற்றோரிடம் ஒப்படைத்தக் காவல்துறையினர், தனுஜ் சாஹரைக் கைதுசெய்து அழைத்துச் சென்றனர். கைதுக்குமுன் நடந்த பாசப்போராட்டம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.